முல்லைப்பெரியாற்றுக்கு தண்ணீர் வெளியேற்றும் 'போர்பை' அணை பகுதியில் தமிழக அதிகாரிகள் ஆய்வு
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழகத்துக்கு ஆற்றில் தண்ணீர் வெளியேறும் பகுதியில் உள்ள ‘போர்பை' அணையில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழகத்துக்கு ஆற்றில் தண்ணீர் வெளியேறும் பகுதியில் உள்ள 'போர்பை' அணையில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.
'போர்பை' அணை
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதற்கான மதகு தேக்கடியில் உள்ளது. அந்த மதகு வழியாக வெளியேற்றப்படும் தண்ணீரை, லோயர்கேம்ப் பெரியாறு மின் உற்பத்தி நிலையம் மற்றும் இரைச்சல் பாலம் ஆகிய பகுதிகளுக்கு திருப்பி விடும் 'போர்பை அணை' குமுளி அருகே தமிழக வனப்பகுதியில் உள்ளது. இந்த 'போர்பை' அணை பகுதியில் தமிழக நீர்வளத்துறை, மின்வாரியம், மின்உற்பத்தி கழக அதிகாரிகள் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.
தமிழக நீர்வளத்துறை திட்ட உருவாக்கப்பிரிவு முதன்மை பொறியாளர் பொன்ராஜ் தலைமையில் இந்த ஆய்வு நடந்தது. இதில், மதுரை மண்டல முதன்மை பொறியாளர் ஞானசேகர், சென்னை முதன்மை பொறியாளர் சுரேஷ், பெரியாறு வைகை நீர்ப்பாசன மதுரை கண்காணிப்பு பொறியாளர் மலர்விழி, தமிழ்நாடு மின்உற்பத்தி கழக நிர்வாக பொறியாளர் (திட்ட ஆய்வு) பாபு, பெரியாறு மின்உற்பத்தி நிலைய நிர்வாக பொறியாளர் ஆனந்த், உதவி நிர்வாக பொறியாளர் கருணாகரன், முல்லைப்பெரியாறு அணையின் சிறப்பு கோட்ட பொறியாளர் சாம் இர்வின் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கூடுதல் தண்ணீர்
'போர்பை' அணை மற்றும் அங்கிருந்து இரைச்சல் பாலம், ராட்சத குழாய்கள் வழியாக தண்ணீர் திறக்கப்படும் பகுதிகள் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தனர். ராட்சத குழாய்களிலும் நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், இரைச்சல் பாலம் பகுதியிலும் ஆய்வு செய்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற ஆய்வுகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி வருடாந்திர ஆய்வாக இது நடத்தப்பட்டது. அத்துடன், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் எடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து, கூடுதல் தண்ணீர் எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வருகின்றனர். அத்தகைய சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யும் வகையிலும், அதிகபட்சமாக எவ்வளவு தண்ணீர் வரை எடுக்கலாம் என்பது தொடர்பாகவும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
இந்த ஆய்வுக்காக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நேற்று நிறுத்தப்பட்டது. ஆய்வு முடிந்தவுடன் மாலையில் மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது.