தமிழக அரசாணை 152-ஐ ரத்து செய்ய வேண்டும்


தமிழக அரசாணை 152-ஐ ரத்து செய்ய வேண்டும்
x

தமிழக அரசாணை 152-ஐ ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

வேலூர்

வேலூர் மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் செயலாளர் சரவணன், பொருளாளர் கதிர்வேல், மாநகராட்சி மாநில ஊர்தி ஓட்டுனர் சங்க மாநில தலைவர் தெய்வசிகாமணி மற்றும் நிர்வாகிகள் நேற்று வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, துணைமேயர் சுனில்குமார், கமிஷனர் அசோக்குமார் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில், தமிழ்நாட்டில் உள்ள 20 மாநகராட்சிகளின் மக்கள் தொகைக்கு ஏற்ப அளவுகோல் நிர்ணயம் செய்திடவும், ஒரே சீரான புதிய பணியிடங்களை தோற்றுவிக்கவும், ஏற்கனவே உள்ள பணியிடங்களை மறுசீரமைத்திடவும், முறைப்படுத்திடவும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசாணை 152 பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதன்காரணமாக மாநகராட்சி வரிவசூலர், டிரைவர், பதிவறை எழுத்தர், மருத்துவ அலுவலர், செவிலியர், மருந்தாளுனர், துப்புரவு பணி மேற்பார்வையாளர், தூய்மை பணியாளர் உள்பட 20 பணியிடங்கள் நீக்கம் செய்யப்படும். தற்போது இந்த பணியிடங்களில் பணிபுரிபவர்கள் ஓய்வுப்பெற்ற பின்னர் அந்த பணியிடங்கள் வெளிமுகமை (அவுட்சோர்சிங் சர்வீஸ்) மூலம் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கருணை அடிப்படையில் பணி நியமனம் நீக்கப்படுவதால் பணிக்காலத்தில் இறந்த ஊழியர்களின் குடும்பங்கள் நிர்கதியான சூழ்நிலைக்கு தள்ளப்படும். எனவே மாநகராட்சி ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசாணை 152-ஐ ரத்து செய்வதற்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர், முதல்-அமைச்சர் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கூறியிருந்தனர்.


Next Story