தமிழக மக்கள் முன்னேற்ற கழக கூட்டம்
தமிழக மக்கள் முன்னேற்ற கழக கூட்டம் நடைபெற்றது.
ராஜபாளையம்,
ராஜபாளையத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் சங்கம் இணைந்து பொதுக்கூட்டம் நடத்தினர். கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளர் ராமராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச்செயலாளர் செந்தில் வேல் குரு, கிழக்கு ஒன்றியம் சார்பில் ராமர், பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் ஜான் பாண்டியன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- தாழ்த்தப்பட்டோர் என்று அழைக்கப்பட்ட மக்களை தேவேந்திர குல வேளாளர் என்று பெயர் மாற்றம் செய்வதற்காக ஜெயலலிதா உள்ளிட்ட அனைத்து முதல்-அமைச்சர்களையும் நேரில் சென்று கோரிக்கை விடுத்தேன். இந்தநிலையில் பிரதமர் நரேந்திர மோடி வந்த பிறகு இந்த சமுதாயம் குறித்து ஆராய்ச்சி செய்து தேவேந்திரகுல வேளாளர் என்று அரசாணை வெளியிட்டது பிரதமர் மோடி என்பதில் பெருமை கொள்கிறேன். நாம் யாருக்கும் அடிமைகள் அல்ல. உரிமைகள் எல்லாம் பறித்து விட்டனர். அதன் ஒரு பகுதியாக நம்மை பல்வேறு பிரிவுகளாக பிரித்து கோவிலுக்குள் செல்ல முடியாத அளவு செய்து விட்டனர். தேவேந்திரகுல வேளாளர்களை பட்டியல் பிரிவிலிருந்து வெளியேற்ற வேண்டும். இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாநில மகளிரணி செயலாளர் நளினி சாந்தகுமாரி, துணைச்செயலாளர் சண்முக சுதாகர், நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.