தமிழ்நாடு, புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை ஓய்ந்தது: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு


தமிழ்நாடு, புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை ஓய்ந்தது: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
x

தமிழ்நாடு, புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை ஓய்ந்துவிட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்கள் ஆண்டின் பெரும்பாலான மழைப்பொழிவை, வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் பெறுகிறது. அந்த வகையில் வடகிழக்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 3 அல்லது 4-வது வாரத்தில் தொடங்கி டிசம்பர் மாதம் வரையும், சில நேரங்களில் ஜனவரி மாதத்தின் முதல் வாரம் வரையிலும் நீடிக்கும்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு (2022) அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. ஆண்டின் முதல் மற்றும் 2-வது மழைப் பொழிவுகளில் எதிர்பார்த்ததைவிட அதிகளவு மழை பதிவாகியது. அதிகபட்சமாக சீர்காழியில் 43 செ.மீ. ஒரே நாளில் மழை கொட்டியது. இது 120 ஆண்டுகளில் இல்லாத மழைப்பதிவாக சொல்லப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மழை அளவு குறைந்தது. இடையில் வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களிலும், அதன் பின்னர் தென் மாவட்டங்களிலும் ஓரளவுக்கு மழை இருந்தது.

நேற்றுடன் விலகியது

வானிலை ஆய்வு மையத்தின் வடகிழக்கு பருவமழை கணக்கின்படி, 2022-ம் ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் 31-ந்தேதி வரையிலான பருவமழை காலம் வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் சராசரியாக 44.5 செ.மீ. மழை பதிவாகியிருந்தது. அதாவது, இது இயல்பைவிட 1 சதவீதம் அதிகம் ஆகும்.

டிசம்பருக்குப் பின் தமிழகத்தில் மழை குறைந்தது. ஆனால் வடகிழக்கு பருவமழை முற்றிலுமாக விலகவில்லை. ஆங்காங்கே சில இடங்களில் மட்டும் மழை பதிவாகி வந்தது. இந்தநிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் அதனை ஒட்டிய கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா, கேரள பகுதிகளில் இருந்து வடகிழக்கு பருவமழை விலகி ஓய்வதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் கணக்கின்படி, அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பதிவாகும் மழை அளவை வடகிழக்கு பருவமழை காலமாக கணக்கில் கொள்ளப்படுகிறது. அதன்படி, அதிகபட்சமாக கடந்த 2021-ம் ஆண்டில் இயல்பைவிட 59 சதவீதம் அதிகமாக மழை பெய்து இருந்தது.


Next Story