தமிழக வாழ்வுரிமை கட்சி கலந்தாய்வுக்கூட்டம்
வடலூரில் தமிழக வாழ்வுரிமை கட்சி கலந்தாய்வுக்கூட்டம் நடந்தது.
வடலூர்,
தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில இளைஞரணி, கடலூர் மாவட்ட இளைஞரணி மற்றும் மாணவரணி நிர்வாகிகள் கலந்தாய்வுக்கூட்டம் வடலூரில் நடந்தது. இதற்கு கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். கடலூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் அரங்கநாதன், மாவட்ட இளைஞரணி தலைவர் தணிகைவேல், கிழக்கு மாவட்ட மாணவரணி செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் என்.எல்.சி. இந்தியா நிறுவனத்துக்கு வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு வீட்டில் ஒருவருக்கு அரசு வேலையும், ஏக்கர் ஒன்றுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடாக வழங்கவேண்டும். சட்டமன்ற தொகுதி வாரியாக புதிய இளைஞரனி பொறுப்பாளர்களை நியமித்து கட்டமைப்பை வலுப்படுத்துதல், சட்டமன்றத்தில் தலைவர் வேல்முருகன் செயல்பாட்டையும், கட்சியின்போராட்டங்களையும் விளக்கும் விதமாக தெருமுனை பிரசாரம் நடத்துவது, 4 மாதத்திற்கு ஒருமுறை இளைஞரணி கூட்டம் மாநிலம் முழுவதும் நடத்துவது, கார்ப்பரேட் மோடி அரசின் தமிழர் விரோத செயல்களை பொதுமக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் விதமாக கிராமம் தோறும் திண்ணை பிரசாரம் செய்தல், மாநிலம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கையில் தீவிரமாக ஈடுபடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் தலைமை நிலைய செயலாளர் கனல் கண்ணன், மாநில தொழிற்சங்க பேரவை தலைவர் ஜம்புலிங்கம், மாநில இளைஞரணி தலைவர் ஜெரேன்குமார், மாநில இளைஞரணி செயலாளர்கள் வி.கே.முருகன், முருகானந்தம், மாநில ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் வடலூர் சோதி குமரவேல், மாநில மாணவரணி செயலாளர் அருள்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கடலூர் கிழக்கு மாவட்ட மாணவரணி தலைவர் தங்கபாண்டியன் நன்றி கூறினார்.