தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் தலை நிமிர்ந்து, கம்பீரமாக இருக்கிறது -முதல்-அமைச்சர் பெருமிதம்


தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் தலை நிமிர்ந்து, கம்பீரமாக இருக்கிறது -முதல்-அமைச்சர் பெருமிதம்
x

யார் ஒப்புக்கொண்டாலும், ஒப்புக் கொள்ளவில்லை என்றாலும் தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் தலை நிமிர்ந்து, கம்பீரமாக இருக்கிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார்.

சென்னை,

தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் 71 அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் தொழில்நுட்ப மையங்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி 'டாடா டெக்னாலஜிஸ்' நிறுவனத்துடன் கடந்த ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதில் முதற்கட்டமாக காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, அரக்கோணம், திண்டிவனம், கடலூர், சிதம்பரம், ஈரோடு, திருப்பூர் மாவட்டம் தாராபுரம், நாமக்கல், சேலம், மதுரை, தேனி, போடி, திண்டுக்கல், தூத்துக்குடி, திருச்சி, மணிகண்டம், விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை, நெல்லை ஆகிய 22 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.762 கோடியே 30 லட்சம் செலவில் 4.0 தொழில்நுட்ப மையங்கள் அமைக்கப்பட்டன.

இந்த மையங்கள் திறப்பு விழா காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் அமைக்கப்பட்ட மையத்தை நேரடியாகவும், மற்ற இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களை காணொலி காட்சி வாயிலாகவும் திறந்து வைத்தார்.

பின்னர் அவர், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதி திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர் கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவி தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் ஒரகடம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் படிக்கும் 5 மாணவிகளுக்கு வங்கி பற்று அட்டைகள் (டெபிட் கார்டு) வழங்கினார். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தமிழ் வழி பாடப் புத்தகங்களையும் வழங்கினார்.

உலக வர்த்தகத்தில் முக்கிய பங்கு

விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

'டாடா சன்ஸ்' குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் இங்கே வருகை தந்திருப்பதில் நமக்கெல்லாம் பெரிய மகிழ்ச்சி. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தமிழர், உலகின் தலை சிறந்த டாடா குழுமத்தின் தலைமைப் பொறுப்பில் அமர்ந்திருப்பதும், நாமக்கல் மாவட்டம் மோகனூரில் பிறந்து, அரசுப் பள்ளிக்கூடத்தில் படித்து இந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறார் என்பதும், தமிழ்நாட்டிற்கும் நமக்கும் மிகப்பெரிய பெருமையாக அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டு இளைஞர்கள் சந்திரசேகரனை எடுத்துக்காட்டாக எடுத்துக்கொண்டு முன்னேற்றம் காண வேண்டும் என்று இந்த நேரத்திலே உங்களையெல்லாம் நான் கேட்டுக் கொள்கிறேன்.

யார் ஒப்புக் கொண்டாலும், ஒப்புக்கொள்ளாவிட்டாலும், யார் மறைத்தாலும் தமிழ்நாடு என்பது அனைத்துத் துறைகளிலும் தலைசிறந்த மாநிலமாக, தலை நிமிர்ந்து, ஏன் கம்பீரமாக இன்றைக்கு நின்று கொண்டு இருக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளின் மூலமாக உலகளாவிய வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தமிழ்நாடு அரசின் 'தமிழ்நாடு வழிகாட்டி' அலுவலகத்தின் மூலமாக ஜனவரி 2022 முதல் மே 2023 வரை 110 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.2 லட்சத்து 3 ஆயிரத்து 279 கோடி முதலீடு பெறப்பட்டு 1 லட்சத்து 96 ஆயிரத்து 596 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த முதலீடுகள் தமிழ்நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும் என பெருமிதத்துடன் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் முதல்வன் திட்டம்

எனது கனவுத் திட்டங்களில் ஒன்று, 'நான் முதல்வன்' திட்டம் தொடங்கப்பட்டதன் வாயிலாக தொழிற்சாலைகளுக்கு தேவையான வருங்காலப் பணியாளர் தேவை வளத்தை மேம்படுத்தக்கூடிய சூழ்நிலை உருவாக்கியுள்ளது.

மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப எதிர்கால வேலைவாய்ப்புகளை தமிழ்நாட்டு இளைஞர்கள் பெறவேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், தமிழ்நாடு அரசு 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை ரூ.2 ஆயிரத்து 877 கோடியே 43 லட்சம் செலவில் திறன் பயிற்சிகளை வழங்கும் வகையில், தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்த விரைந்து செயல்பட்டு வருகிறது. இது தமிழ்நாட்டு தொழிற்பயிற்சி நிலையங்களின் வளர்ச்சியில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியாக அமைந்திருக்கிறது.

எல்லாருக்கும் எல்லாம் என்பதை அடிப்படையாகக் கொண்டு திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. அனைத்து திறமைகளையும் கொண்டவர்களாக மாணவர்களை, இளைஞர்களை உருவாக்க வேண்டும். தமிழ்நாட்டு இளைய சக்தியை உலக நிறுவனங்கள் அனைத்தும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த நோக்கத்துடன்தான் பல்வேறு திட்டங்களை நாங்கள் தீட்டி வருகிறோம். அனைவருக்கும் திறமை வளர்ப்பதற்கான ஒரே மாதிரியான வாய்ப்பை தமிழ்நாடு அரசு வழங்கும். எங்களது எண்ணத்திற்கு வலுசேர்த்து உதவ அனைத்து நிறுவனங்களும் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பங்கேற்றவர்கள்

விழாவில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சி.வி. கணேசன், டி.ஆர்.பி.ராஜா, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, செல்வம், எம்.எல்.ஏ.க்கள் கு.செல்வப்பெருந்தகை, ஜோசப் சாமுவேல், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுத்தின், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் வீர ராகவ ராவ், சிப்காட்' மேலாண்மை இயக்குநர் எ.சுந்தரவல்லி, காஞ்சீபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன், 'டாடா சன்ஸ்' குழும தலைவர் என்.சந்திரசேகரன், தலைமை செயல் அதிகாரி வாரன் ஹாரிஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


Next Story