கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கியதில் தமிழகம் முதலிடம்: ஜனாதிபதி பாராட்டு
மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கியதில் தமிழகம் முதலிடம் பெற்றது. இதற்கான விருதை ஜனாதிபதியிடம் இருந்து அமைச்சர் கே.என்.நேரு பெற்றுக்கொண்டார்.
சென்னை,
மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் தமிழக ஊரகப்பகுதிகளில் உள்ள 1 கோடியே 24 லட்சத்து 93 ஆயிரம் வீடுகளில் இதுவரை 69 லட்சத்து 14 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 55 சதவீத வீடுகள் குடிநீர் இணைப்பு பெற்றுள்ளன. மீதமுள்ள 55 லட்சத்து 79 ஆயிரம் வீடுகளுக்கு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கும் பணியை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உள்ள வீடுகளில் அதிக வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கியதில் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பெற்றது.
விருது
இதற்கான விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து தமிழக அரசின் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பெற்றுக்கொண்டார்.
அப்போது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர் பொன்னையா ஆகியோர் உடன் இருந்தனர்.
இதைத்தொடர்ந்து மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திரசிங் செகாவாத்தை, அமைச்சர் கே.என்.நேரு நேரில் சந்தித்தார்.
நிதி ஒதுக்க வேண்டும்
அப்போது, ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.18 ஆயிரம் கோடிக்கு 42 புதிய குடிநீர் திட்டங்களுக்கும், 56 குடிநீர் திட்டங்களை மறுசீரமைக்கும் பணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டு பல்வேறு நிலைகளில் செயலாக்கத்தில் உள்ளன. இதன் காரணமாக பெரிய கூட்டுக்குடிநீர் திட்டங்களை செயல்படுத்தி முடிக்க போதுமான கால அவகாசம் தேவைப்படுவதால் ஜல்ஜீவன் திட்டத்தை மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கூட்டுக்குடிநீர் திட்டத்தின் நீடித்த நிலைத்தன்மையை உறுதி செய்ய காவிரி, கொள்ளிடம், வெள்ளாறு ஆகிய ஆறுகளின் குறுக்கே 5 இடங்களில் கூட்டுக்குடிநீர் திட்டங்கள் உள்ள இடங்களின் அருகே தடுப்பணைகள் கட்டுவதற்கு ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.2,400 கோடி சிறப்பு நிதியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும், காவிரி, கொள்ளிடம் ஆற்றின் உபரிநீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க புதிய திட்டங்களை செயல்படுத்த ரூ.700 கோடி ஒதுக்க வேண்டும் என்றும் மத்திய மந்திரியிடம் கோரிக்கை விடுத்தார்.
சுகாதாரத்துக்காக விருது
ஊரக பகுதிகளில் உள்ள சுகாதாரத்தின் தரம் மற்றும் சுகாதார உட்கட்டமைப்பில் அடைந்த முன்னேற்றம் ஆகியவற்றை முக்கிய அளவீடுகளாக கொண்டு இந்தியாவில் உள்ள மாநிலங்களை தரவரிசைப்படுத்தியதில் தமிழகம் 3-வது இடத்தை பிடித்துள்ளது.
இதற்காக வழங்கப்பட்ட விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பெற்றுக்கொண்டார்.
தமிழகத்தில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்காக பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. அப்போது துறையின் முதன்மை செயலாளர் பெ.அமுதா உடன் இருந்தார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.