செஸ் போட்டியுடன் தமிழகத்துக்கு வரலாற்று தொடர்பு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்
இயற்கையாகவே செஸ் போட்டியுடன் வலுவான தொடர்பு தமிழகத்திற்கு உண்டு என்று பிரதமர் நரேந்திர மோடி புகழ்ந்து பேசினார்.
சென்னை,
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். 'வணக்கம்' என்று தமிழில் கூறி அவர் பேசியதாவது:-
இந்தியாவில் நடைபெறும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க வந்திருக்கும் அனைவரையும் வரவேற்கிறேன். செஸ் போட்டியின் மதிப்புமிக்க தொடர், செஸ் போட்டியின் தாயகமான இந்தியாவுக்கு வந்திருக்கிறது. 75-வது சுதந்திர தின அமிர்த பெருவிழாவை கொண்டாடும், இந்திய வரலாற்றின் சிறப்பான தருணத்தில் செஸ் போட்டி இந்தியாவுக்கு வந்திருக்கிறது. நாட்டின் முக்கியமான நேரத்தில் செஸ் போட்டி இந்தியாவில் நடத்தப்படுவது கவுரவமானது.
குறுகிய காலத்துக்குள் இந்த போட்டிக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தகுதியான இடம்
செஸ் போட்டி பிறந்த இடத்தில் சிறப்பான திறனை வெளிப்படுத்த நாங்கள் உதவிகரமாக இருப்போம். 44-வது செஸ் ஒலிம்பியாட் பல்வேறு சாதனைகளை கொண்டது. செஸ் பிறந்த இடத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படுகிறது. 30 ஆண்டுகளுக்கு பிறகு ஆசியாவிலும் முதல்முறையாக நடத்தப்படுகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு அதிக நாடுகள், அதிக அணிகள் போட்டியில் பங்கேற்கின்றன. மகளிர் பிரிவிலும் அதிக அணிகள் பதிவு செய்துள்ளன.
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதி இந்த ஆண்டு முதல்முறையாக தொடங்கப்பட்டுள்ளது. 75-வது சுதந்திரதினத்தை கொண்டாடும் வேளையில், செஸ் ஜோதி 75 இடங்களுக்கு சென்றிருக்கிறது. 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கி.மீ. தூரம் பயணம் செய்துள்ளது. இளைஞர்களின் எண்ணங்களை ஒருங்கிணைத்ததோடு, செஸ் போட்டியை தேர்ந்தெடுப்பதற்கான உத்வேகத்தையும் கொடுத்திருக்கிறது.
செஸ் ஒலிம்பியாட் ஜோதி இந்தியாவில் இருந்து தொடங்கியது. மேலும் ஒரு பெருமை தந்திருக்கிறது. ஒவ்வொரு இந்தியர்களின் சார்பிலும் 'பிடே'வுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். செஸ் ஒலிம்பியாட் போட்டி தகுதியான இடத்தில் நடக்கிறது.
வரலாற்றுதொடர்பு
தமிழகத்தில் ஏராளமான கோவில்கள் உள்ளன. அழகான சிற்பங்கள், வெவ்வேறு வகையான விளையாட்டுகளை பிரதிபலிக்கிறது. விளையாட்டு என்பது, நமது கலாசாரத்தில் தெய்வீகமானதாக கருதப்படுகிறது. தமிழகத்தில், சதுரங்க வல்லபநாதருக்கு கோவில் உள்ளது. திருப்பூவனூரில் உள்ள இந்த கோவிலுக்கு செஸ் போட்டி தொடர்பாக சிறப்பான கதை இருக்கிறது.
கடவுள் கூட செஸ் விளையாடி இருக்கிறார். இயற்கையாகவே செஸ் போட்டியுடன், தமிழகத்துக்கு வலுவான வரலாற்றுதொடர்பு இருக்கிறது. செஸ் போட்டிக்கு தமிழகம்தான் ஆற்றல்மிகு இல்லம். தமிழகம் பல கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கி இருக்கிறது. தமிழகம் சிறப்பான மனம், துடிப்பான கலாசாரத்தை கொண்டது.
ஒரே உணர்வு
உலகிலேயே பழமையான மொழி தமிழ். இந்த வாய்ப்பை சென்னை, மாமல்லபுரம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளை அறிந்து கொள்வதற்கு பயன்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன். விளையாட்டுக்கு ஒருங்கிணைப்பதற்கான உள்ளார்ந்த ஆற்றல் இருப்பதால், அது அழகானது. விளையாட்டு மக்களையும், சமூகத்தையும் வலிமையாக்கும். நம்முடைய பணியை வேகமாக செய்வதற்கு விளையாட்டு உதவியாக இருக்கும்.
2 வருடங்களுக்கு முன்பு நூற்றாண்டுகளில் இல்லாத பெரிய கொரோனா என்ற கொடிய தொற்றுநோய்க்கு எதிராக உலகமே போராட தொடங்கியது. நீண்ட நாட்கள் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. அந்த நேரத்தில், பல்வேறு விளையாட்டு போட்டி தொடர்கள் உலகத்தை ஒரு குடைக்குள் கொண்டு வந்தது. ஒவ்வொரு தொடர்களும் நாங்கள் வலிமையானவர்கள், ஒன்றாக கூடி நிற்கிறோம் என்ற வலிமையான தகவலை பிரதிபலித்தது. நாங்கள் சிறப்பானவர்கள், ஒன்றாக சேர்ந்திருக்கிறோம். அந்த மாதிரியான ஒரே உணர்வை நான் இங்கு பார்க்கிறேன்.
மகிழ்ச்சி
கொரோனாவுக்கு பிந்தைய காலத்தில் உடல் அளவிலும், மனதளவிலும் நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டியதை உணர்கிறேன். அதனால்தான் விளையாட்டு திறன் உள்ளவர்களையும், விளையாட்டுக்கான கட்டமைப்புகளையும் ஊக்குவிக்க வேண்டியது முக்கியம். இதுவரை இல்லாத அளவுக்கு, இந்தியாவில் இப்போதுதான் விளையாட்டுக்கு சிறப்பான காலமாக அமைந்திருக்கிறது.
ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக், காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில் இந்தியா தனது திறமையை காட்டியிருக்கிறது. இதற்கு முன்பு இல்லாத வகையில் நாம் விளையாட்டில் சாதித்து காட்டி இருக்கிறோம். விளையாட்டு என்பது இப்போது தொழில் ரீதியாக தேர்வு செய்யப்படுவதில் முக்கியமாக திகழ்கிறது. இளைஞர்களின் சக்தி, சிறப்பான சுற்றுச்சூழல் காரணமாக இந்தியாவின் விளையாட்டு கலாசாரம் வலிமையாகி கொண்டே வருகிறது. சிறிய கிராமங்கள், நகரங்களை சேர்ந்த நமது திறமையான வீரர்கள் புகழ் சேர்க்கிறார்கள். விளையாட்டில் பெண்கள் இந்தியாவை வழி நடத்துவதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
சிறந்த நினைவுகள்
நிர்வாக, ஊக்கத்தொகை கட்டமைப்பு, கட்டமைப்புகள் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் நடைபெறுவது, சர்வதேச விளையாட்டுக்கு இன்று சிறப்பான நாள். இங்கிலாந்தில் காமன்வெல்த் போட்டி இன்று தொடங்கி இருக்கிறது. உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான தடகள வீரர்கள், அவர்களுடைய நாட்டுக்கு பெருமை சேர்க்க உழைக்கிறார்கள். அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
விளையாட்டில் தோல்வி அடைபவர்கள் கிடையாது. வெற்றியாளர்கள் மற்றும் எதிர்கால வெற்றியாளர்கள் என 2 பேர்தான் உண்டு. ஒலிம்பியாட் போட்டியில் கலந்துகொள்ள வந்திருக்கும் அணிக்கும், வீரர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தியாவில் இருந்து சிறந்த நினைவுகளை கொண்டு செல்வீர்கள் என்று நம்புகிறேன். இந்தியா திறந்த கைகளோடு அனைவரையும் வரவேற்கிறது.
இவ்வாறுஅவர்பேசினார்.
திருக்குறளை மேற்கோள் காட்டிய மோடி
பிரதமர் மோடி பேசும்போது திருக்குறளை மேற்கோள் காட்டினார். அப்போது அவர், 'எங்களுடைய விருந்தினர்களை கடவுளாக மதிப்பவர்கள் நாங்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் ''இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு'' என்று கூறியிருக்கிறார். வீட்டில் இருந்து, பொருட்களை சேர்த்தும். காத்தும் வாழ்வதுஎல்லாம் வந்த விருந்தினரை பேணி அவர்களுக்கு உதவுவதற்கே என்பதே அதன் பொருள். நீங்கள் சவுகரியமாக இருப்பதை உணருவதற்காக ஒவ்வொரு முயற்சிகளையும் நாங்கள் எடுக்கிறோம்' என்றார்.