உத்தனப்பள்ளியில் தமிழ் தேசிய பேரியக்கத்தினர் ஆர்ப்பாட்டம்-505 பேர் கைது
உத்தனப்பள்ளியில் ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ் தேசிய பேரியக்கத்தினர் 505 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றியத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வட மாநில தொழிலாளர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு வழங்குவதாகவும், தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும் கூறி, தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று உத்தனப்பள்ளியில் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை செயற்குழு உறுப்பினர் மாரிமுத்து தலைமை தாங்கினார்.
மாநில தலைவர் மணியரசன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபினபு தலைைமயிலான போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 505 பேரை கைது செய்தனர்.
முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாநில தலைவர் மணியரசன் கூறும் போது, 'தி.மு.க. தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 75 சதவீத வேலைவாய்ப்பு தமிழர்களுக்கு வழங்க சட்டம் இயற்றுவோம் என கூறினார்கள். ஆனால் இன்றோ வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்படுகிறது' என்றார்.