கோவில்களில் தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு
தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிறப்பு வழிபாடு
நாகை அருகே சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக சிங்காரவேலவருக்கு, பால், தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், பன்னீர், திரவிய பொருட்களை கொண்டு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சிங்காரவேலவர் மலர் அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாகை நீலாயதாட்சியம்மன் கோவில் குளக்கரையில் தனி சன்னதி கொண்டுள்ள சிம்மவாகன கால சம்ஹார பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி மற்றும் தமிழ் புத்தாண்டையொட்டி திரவிய பொடி, மஞ்சள், மாப்பொடி, பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், பன்னீர், கரும்பு சாறு, விபூதி, சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
சொர்ண ஆகர்ஷண பைரவர் கோவில்
அதேபோல் கோவில் உள்பிரகாரத்தில் உள்ள மகாகால சம்ஹார பைரவருக்கும், காசி பைரவருக்கும் அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து சாமிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நாகூரில் உள்ள சொர்ண ஆகர்ஷண பைரவர் கோவில், வடக்கு பொய்கை நல்லூர் நந்தி நாதேஸ்வரர் கோவில், வேளாங்கண்ணி ரஜதகீரிஸ்வரர் கோவில், திருவாய்மூர் தியாகராஜ சுவாமி கோவிலில் உள்ள அஷ்ட பைரவர் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
சுந்தர விடங்க தியாகராஜருக்கு அபிஷேகம்
நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலில் உள்ள சுந்தர விடங்க தியாகராஜருக்கு தமிழ்புத்தாண்டையொட்டி சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. .முன்னதாக அதிகாலை 4 மணிக்கு சுந்தரவிடங்க தியாகராஜர் நீலோத்தம்பாளுக்கு கலசங்கள் வைக்கப்பட்டு ஹோமம் செய்யப்பட்டு மகா பூர்ணாகுதி நடந்தது.
இதையடுத்து சாமிக்கு மஞ்சள்பொடி, திரவிய பொடி, பச்சரிசிமாவு, இளநீர், பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யபட்டுமலர்கள் மற்றும் பட்டு சாற்றி அலங்கரிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நெல்லு கடை மாரியம்மன் கோவில், மகாகாளியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.