சேலத்தில் தமிழ் ஆட்சிமொழி சட்ட கருத்தரங்கு: வணிக நிறுவனங்களுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும்-வியாபாரிகளுக்கு, தொழிலாளர் உதவி ஆணையர் அறிவுறுத்தல்
வணிக நிறுவனங்களுக்கு தமிழில் பெயர் பலகை வைக்க வியாபாரிகள் முன்வர வேண்டும் என்று சேலத்தில் நடந்த தமிழ் ஆட்சிமொழி சட்ட கருத்தரங்கில் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் கிருஷ்ணவேணி பேசினார்.
கருத்தரங்கம்
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழ் ஆட்சி மொழி சட்டம் குறித்த கருத்தரங்கம் சேலம் அன்னதானப்பட்டியில் அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க கட்டிடத்தில் நடந்தது. இதில், அனைத்து வணிகர் சங்கங்களின் நிர்வாகிகள், ஓட்டல் உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழ் வளர்ச்சித்துறை கண்காணிப்பாளர் சுகன்யா, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் பெரியசாமி, செயலாளர் இளையபெருமாள், பொருளாளர் செல்வகுமார், இணை செயலாளர் திருமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தேசிய சமூக இலக்கிய பேரவை தலைவர் தாரை குமரவேல் கலந்து கொண்டு தமிழ் மொழி குறித்தும், வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்களை வைப்பது தொடர்பாகவும் விளக்கி பேசினார்.
கருத்தரங்கில் சேலம் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் கிருஷ்ணவேணி கலந்து கொண்டு பேசியதாவது:-
தமிழில் பெயர் பலகை
தமிழ் ஆட்சி மொழி சட்டம் தொடர்பாக வணிக நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு பல்வேறு கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் ஒருசில இடங்களை தவிர பெரும்பாலான இடங்களை பார்க்கும்போது தமிழில் பெயர்களை காணமுடியவில்லை. பல்வேறு இடர்பாடுகள் இருந்தாலும் கடையின் பெயர்கள் தமிழில் இருந்தால் அழகாகவும், நன்றாகவும் இருக்கும். டிபார்ட்மெண்டல் ஸ்டோர் என்று இருப்பதை பல்பொருள் அங்காடி அல்லது சிறப்பு அங்காடி என்று பெயர் எழுதி கடை முன்பு வைக்கலாம்.மளிகை, ஓட்டல்கள், வணிக நிறுவனங்களுக்கு தமிழ் பெயரில் பெயர்கள் வைக்க வேண்டும் என்று சட்டத்தில் இடம் உள்ளது. எனவே, சேலம் மாவட்டத்தில் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க வியாபாரிகள் அனைவரும் முன்வர வேண்டும். இதில் 100 சதவீதம் இலக்கை அடைய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.Tamil Official Language Legal Seminar in Salem: Business Firms to Name in Tamil-Traders, Assistant Commissioner of Labor Instructions