தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 2022-2023-ம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க தகுதிகள், 1.1.2022-ம் நாளன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.72 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். தாசில்தார் அலுவலகத்தில் இணையவழியில் (ஆன்லைன்) பெறப்பட்ட வருமானச்சான்று, தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதிநிலை சான்று தமிழறிஞர்கள் 2 பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவம் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித்துறையின் வலைத்தளத்திலோ (www.tamilvalar chithurai.tn.gov.in) இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்படுபவருக்கு மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ.3500, மருத்துவப்படி ரூ.500 அவரின் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் முதல் தளத்தில் இயங்கிவரும் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் வருகிற 31-ந் தேதிக்குள் அளிக்கப்பட வேண்டும். நேரடியாக தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் அளிக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என கலெக்டர் கவிதாராமு தெரிவித்துள்ளார்.