தமிழ்ப்புலிகள் கட்சியினர் போராட்டம்
தமிழ்ப்புலிகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
தமிழ்ப்புலிகள் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் பெரியார் மணி தலைமையில் அக்கட்சியினர் நேற்று பழனி ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அலுவலக நுழைவு வாயில் முன்பு நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பழனி அருகே கோதைமங்கலம் குட்டக்காடு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சாலை, கழிப்பிடம், தெருவிளக்கு என அடிப்படை வசதிகள் இல்லை. மேலும் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் மக்களின் உயிருக்கும் அச்சுறுத்தலாக உள்ளது.
இதுகுறித்து பலமுறை வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். இல்லையென்றால் ஆதார், ரேஷன்கார்டை திரும்ப ஒப்படைத்துவிட்டு வனப்பகுதியில் குடியேறுவோம் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த பழனி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்துவிட்டு தமிழ்ப்புலிகள் கட்சியினர் கலைந்து சென்றனர்.