'அரசு, தனியார் துறையில் 80 சதவீத வேலை வாய்ப்பை தமிழர்களுக்கு வழங்க வேண்டும்'
‘தமிழ்நாட்டில் அரசு, தனியார் துறையில் 80 சதவீத வேலை வாய்ப்பை தமிழர்களுக்கு வழங்க வேண்டும்’ என்று பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி கூறினார்.
ஆலோசனை கூட்டம்
திண்டுக்கல் மாவட்ட பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திண்டுக்கல்லில் நேற்று நடந்தது. இதற்கு வடக்கு மாவட்ட செயலாளர் ஜோதிமுத்து தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். கிழக்கு மாவட்ட செயலாளர் ஜான் கென்னடி வரவேற்றார்.
கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மேற்கொள்ளும் 'தமிழைத்தேடி விழிப்புணர்வு பரப்புரை பயணம்' தொடர்பாக கட்சி நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பேசினார்.
கூட்டத்தில் மாநில பொருளாளர் திலகபாமா, மாவட்ட தலைவர்கள் வைரமுத்து, மணி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் கிழக்கு மாவட்ட தலைவர் திருப்பதி நன்றி கூறினார்.
கூட்டத்தின் முடிவில், ஜி.கே.மணி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விழிப்புணர்வு பயணம்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 'தமிழைத்தேடி' விழிப்புணர்வு பரப்புரை பயணத்தை உலக தாய்மொழி நாளான வருகிற 21-ந்தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இருந்து தொடங்குகிறார். அவர், திண்டிவனம், கடலூர், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி வழியாக திண்டுக்கல்லுக்கு வருகிற 28-ந்தேதி வருகை தருகிறார்.
அன்றைய தினம் மாலையே மதுரைக்கு சென்று விழிப்புணர்வு பரப்புரை பயணத்தை நிறைவு செய்கிறார். சில கல்வி நிறுவனங்களில் தமிழ் கட்டாய பாடமாக இல்லை. எனவே அனைத்து கல்வி நிறுவனங்களிலும் தமிழ் கட்டாய பாடமாக இருக்க வேண்டும்.
கடைகள், வணிக வளாகங்களின் பெயர் பலகைகள் தமிழில் வைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த விழிப்புணர்வு பயணம் நடக்கிறது.
முதல்-அமைச்சருடன் சந்திப்பு
மக்கள் பிரச்சினைக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பா.ம.க. சார்பில் சந்தித்தோம். அப்போது 10.5 சதவீத இடஒதுக்கீடு பிரச்சினை, போதைப்பொருள் ஒழிப்பு, தமிழ் வளர்ச்சி, நீர் மேலாண்மை உள்ளிட்டவை குறித்து முதல்-அமைச்சரிடம் விவாதித்தோம். அவரும், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் வடமாநிலத்தவர்களே பெரும்பாலும் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் தமிழர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் அவதிப்படுகின்றனர். எனவே தமிழ்நாட்டில் அரசு, தனியார் நிறுவனங்களில் 80 சதவீத வேலைவாய்ப்பை தமிழர்களுக்கு வழங்க வேண்டும். இதேபோல் மத்திய அரசு பணிகளில் அந்தந்த மாநிலத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து விழிப்புணர்வு பரப்புரை பயணம் தொடர்பான துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு ஜி.கே.மணி வழங்கினார்.