கழிவுநீர் கலப்பதால் மாசுபடும் தாமிரபரணி ஆறு
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்பட 4 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பதால் ஆறு மாசுபடுகிறது
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தி ஆகும் பொருநை நதி எனப்படும் தாமிரபரணி ஆறு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 86 ஆயிரம் ஏக்கர் நிலத்தின் பாசனத்துக்கும், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது.
ஆற்றில் கழிவுநீர் கலப்பு
தாமிரபரணி ஆற்றில் சேர்வலாறு, கோரையாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட பல்வேறு கிளை ஆறுகள் வந்து கலக்கின்றன. ஆனால் தற்போது கிளை ஆறுகளின் எண்ணிக்கையை விட, தாமிரபரணி ஆற்றில் கலக்கும் சாக்கடை ஆறுகளின் எண்ணிக்கையே அதிகம் என்பது வேதனைக்குரிய விஷயம்.
மக்கள்தொகை பெருக்கம், நகரங்களின் வளர்ச்சி காரணமாக சாக்கடை கால்வாய்களும் பெரிதாகி உள்ளன. வீடுகள், ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நேராக தாமிரபரணி ஆற்றில் வந்து தான் கலக்கிறது. குறிப்பாக நெல்லை மாநகரம் தாமிரபரணி ஆற்றில் சாக்கடையை கலந்து மாசுப்படுத்துவதில் முதலிடம் வகிக்கிறது என்றே சொல்லலாம். மேலக்கருங்குளத்தில் தொடங்கி அருகன்குளம் வரை மாநகர எல்லை பகுதியில் தெருக்கள் தோறும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாக்கடை கால்வாய்கள் மூலம் நேராக தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது. பல இடங்களில் பன்றி வளர்ப்பு கூடாரமாக மாறிவிட்டது.
பாழாகிப்போன சுத்திகரிப்பு அமைப்புகள்
முன்பு பாபநாசம் தலையணை முதல் வங்கக்கடலில் சேரும் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆறு தூய்மையாகவும், புனிதமாகவும் இருந்தது. தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் குளிப்பது மட்டுமல்லாமல், அந்த தண்ணீரை நேரடியாக பருகியும் வந்தனர். ஆனால், தற்போது தாமிரபரணியில் கழிவுநீரும் கலந்து ஓடுவதால் நிலைமை தலைகீழாக மாறி விட்டது.
இந்த நிலையை மாற்றுவதற்கு ஆட்சியாளர்கள் பல்வேறு முயற்சிகள் எடுத்துள்ளதாக கூறிக்கொள்கிறார்கள். ஆனால், அவை அனைத்தும் எந்த பயனும் அளித்ததாக தெரியவில்லை. நெல்லை மாநகரில் மீனாட்சிபுரம், கைலாசபுரம், கொக்கிரகுளம், கருப்பந்துறை, மேலநத்தம், சிந்துபூந்துறை, கொக்கிரகுளம், மேகலிங்கபுரம், உடையார்பட்டி, மணிமூர்த்தீசுவரம், வெள்ளக்கோவில் உள்ளிட்ட பகுதி கழிவுநீர் தாமிரபரணி ஆற்றில் நேரடியாக கலக்கிறது. அந்த கழிவுநீரை சுத்தப்படுத்தி ஆற்றில் விடுவதற்கு மாநகராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் சுத்தகரிப்பு அமைப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆனால் அவை பாழ்பட்டு பயன் இன்றி கிடப்பதால், கழிவுநீர் ஆற்றில் தாராளமாக கலக்கிறது. இதில் குளிக்கும் பொதுமக்களுக்கு ஒவ்வாமை மற்றும் பல்வேறு தோல் நோய்கள் ஏற்படுகிறது.
பாதுகாக்க தீவிர முயற்சி
தற்போது தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்தி, அதன் புனிதத்தை பாதுகாக்கும் வகையில் நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு மற்றும் மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தன்னார்வலர்கள் உதவியுடன் களத்தில் இறங்கி உள்ளனர். ஏற்கனவே ஐ.பி.எஸ். அதிகாரியாக நெல்லைக்கு வருகை தந்த கருணாசாகர், தாமிரபரணி ஆற்றில் சீமைக்கருவேல மரங்கள் ஓங்கி வளர்ந்து இருப்பதை பார்த்து மனம் நொந்து, ஆயுதப்படை போலீசார் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் அதை அகற்றும் பணியை தொடங்கி வைத்து அதில் ஓரளவுக்கு வெற்றியும் கண்டார். அதன்பிறகு நெல்லை மாவட்ட மக்களுக்கும் ஆர்வம் ஏற்பட்டு அவர்களும் தாமிரபரணியை பாதுகாப்பதில் விழிப்பு அடைந்தனர்.