தஞ்சையில் புத்தக திருவிழா இன்று தொடக்கம்
தஞ்சையில் புத்தகத்திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 24-ந்தேதி வரை நடைபெறுகிறது. இது தொடர்பான விழிப்புணர்வு போஸ்டர்களை கலெக்டர் தீபக்ஜேக்கப், பஸ் மற்றும் ஆட்டோக்களில் ஒட்டினார்.
தஞ்சையில் புத்தகத்திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 24-ந்தேதி வரை நடைபெறுகிறது. இது தொடர்பான விழிப்புணர்வு போஸ்டர்களை கலெக்டர் தீபக்ஜேக்கப், பஸ் மற்றும் ஆட்டோக்களில் ஒட்டினார்.
புத்தகத்திருவிழா
தஞ்சை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்ககம் இணைந்து 6-ம் ஆண்டு புத்தகத்திருவிழாவை நடத்துகிறது. இந்த புத்தகத்திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 24-ந்தேதி வரை 11 நாட்கள் தஞ்சை அரண்மனை வளாகத்தில் நடைபெறுகிறது. தினமும் புத்தகத்திருவிழா காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது.
இதன் தொடக்க விழா இன்று நடக்கிறது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமை தாங்குகிறார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி புத்தக திருவிழாவை தொடங்கி வைத்து பார்வையிடுகிறார். இதில் நாடாளுமன்ற, மாநிலங்களவை, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் புத்தக ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
110 அரங்குகள்
இந்த புத்தக திருவிழாவில் மொத்தம் 110 புத்தக அரங்குகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தஞ்சை படைப்பாளர்களை ஊக்குவிப்பதற்காக தனி அரங்கம் ஒன்று இவ்வாண்டு புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிறைவாசிகளுக்கு புத்தக தானம் செய்ய தனி அரங்கம் ஒன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தஞ்சையின் பெருமைகளை பறைசாற்றுகின்ற வகையில் பண்பாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் தஞ்சை மாவட்டத்தை சார்ந்த புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் செய்முறை விளக்கம் மாணவர்களுக்கு கொடுக்கப்பட உள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சேர, சோழ, பாண்டிய மற்றும் பல்லவ பகுதிகள் என அரங்கங்கள் பிரிக்கப்பட்டு பல்வேறு உணவு வகைகளை கொண்ட உணவு திருவிழாவும் நடைபெறுகிறது. நாள்தோறும் காலை 10.30 மணிக்கு தஞ்சை மாவட்டத்தை சார்ந்த படைப்பாளிகள் பங்கேற்கும் இலக்கிய அரங்கம் நடைபெறுகிறது.
சிந்தனை அரங்கம்
மாலை 4.30 மணிக்கு பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். மேலும் மாலை 6 மணிக்கு தஞ்சை தென்னகப் பண்பாட்டு மையம் மற்றும் கலைப் பண்பாட்டுத்துறை வழங்கும் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. தினமும் மாலை 6.30 மணிக்கு தமிழகத்தின் தலைசிறந்த சொற்பொழிவாளர்கள் பங்கேற்கும் நகைச்சுவை சிந்தனை அரங்கம் நடைபெறும்.
பள்ளி கல்லூரி மாணவர்களை ஊக்குவிப்பதற்காக நாள்தோறும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. பங்கேற்பாளர்களுக்கு பரிசு கூப்பன் வழங்கப்பட்டு குலுக்கல் முறையில் நாள்தோறும் மூவர் தேர்ந்தெடுக்கப்பட்டு புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும்.
துண்டுபிரசுரம்
இந்த நிலையில் தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் புத்தக திருவிழா தொடர்பாக பஸ் மற்றும் ஆட்டோக்களில் விளம்பர பேனர்களை கலெக்டர் தீபக்ஜேக்கப் நேற்று ஓட்டி பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், கோட்டாட்சியர் பழனிவேலு, தாசில்தார் சக்திவேல், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், மாநகர நல அலுவலர் டாக்டர் சுபாஷ் காந்தி, தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சிக் குழும உறுப்பினர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தஞ்சை புத்தக திருவிழாவிற்கு ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விரிவாக செய்யப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் புத்தக ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டு பயன் பெற வேண்டுமாறு தஞ்சைமாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் கேட்டுக்கொண்டுள்ளார்.