தஞ்சை மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு 2-வது இடம்
தமிழக அளவிலான தரவரிசை பட்டியலில் தஞ்சை மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு 2-வது இடம் கிடைத்துள்ளது.
தமிழக அளவிலான தரவரிசை பட்டியலில் தஞ்சை மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு 2-வது இடம் கிடைத்துள்ளது.
ஆரம்ப சுகாதார நிலையங்கள்
தமிழக அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை கடந்த 3 மாதங்களாக ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாடுகள் அடிப்படையில் தரவரிசை பட்டியலை மாதந்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள 312 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களின் தரவரிசை வெளியிடப்பட்டு வருகிறது.
தஞ்சை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் கல்லுக்குளம், கரந்தை, மகர்நோன்புச்சாவடி, சீனிவாசபுரம் ஆகிய 4 இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் தஞ்சை கல்லுக்குளம் ஆரம்ப சுகாதார நிலையம் தமிழகத்திலேயே சிறந்த ஆரம்ப சுகாதார நிலையமாக தேர்வு செய்யப்பட்டு 2-வது இடத்தை பிடித்துள்ளது.
பிரசவங்களின் எண்ணிக்கை
இந்த தரவரிசை மொத்தம் 19 சுகாதார குறியீடுகள் அடிப்படையில் வெளியிடப்பட்டு வருகிறது.
புறநோயாளிகள் வருகை, உள்நோயாளிகள் அனுமதி, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களின் பிரசவ எண்ணிக்கை, ஆய்வக பரிசோதனைகள், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பை வாய் பரிசோதனை, கர்ப்பிணி பெண்களின் பதிவு, கருத்தரித்தவுடன் 12 வாரத்திற்குள் கர்ப்பிணி தாய்மார்களின் பதிவு, இரும்பு சத்து மாத்திரை வழங்குதல், குழந்தை பிறப்பின்போது 2.5 கிலோவுக்கு மேல் எடை இருத்தல், குழந்தைகளுக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்துதல் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டு தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்த மதிப்பீட்டின் அடிப்படையில் ஜூன் மாத தரவரிசை பட்டியலில் தஞ்சை மாநகராட்சி பகுதியில் உள்ள கல்லுக்குளம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் தமிழக அளவில் 2-வது இடத்தை பிடித்துள்ளது.
இதே போல் கரந்தை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் 5-வது இடத்தையும், மகர்நோம்புசாவடி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் 38-வது இடத்தையும், சீனிவாசபுரம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் 39-வது இடத்தையும் பிடித்து தஞ்சை மாநகராட்சிக்கு பெருமை சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.