தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கும் பணி தீவிரம்
தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கும் பணி தீவிரம்
ரூ.114 கோடியில் தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தஞ்சை- நாகை தேசிய நெடுஞ்சாலை
தஞ்சையில் இருந்து திருவாரூர் வழியாக நாகை வரையிலான தேசிய நெடுஞ்சாலை வேளாங்கண்ணி, நாகூர் தர்கா ஆகிய ஆன்மிக தலங்கள் செல்லும் பிரதான சாலையாக இருந்து வருகிறது. மேலும் திருவாரூரில் தியாகராஜர் கோவில், கூத்தனூரில் சரஸ்வதி கோவில் ஆகியவை அமைந்துள்ளது. இதனால் தினசரி வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வந்து செல்வது வழக்கம்.
தஞ்சை-நாகை இடையே மிக குறுகிய சாலையாக இருப்பதால் வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதுடன், விபத்துக்கள் அதிகமாக நடைபெற்றும் வருகிறது. கடந்த 2010-ம் ஆண்டுக்கு முன்பு 4 வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்ட நிலையில் பல்வேறு காரணங்களால் பணிகள் கிடப்பில் போடப்பட்டன. இதனை தொடர்ந்து இருவழி சாலையாக அமைத்திட தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டது. அதற்கான பணிகள் கடந்த 2014-ம் ஆண்டு டெண்டர் விடப்பட்டு தொடங்கிய நிலையில் 2016-ம் ஆண்டு பல காரணங்களால் பணிகளை நிறுத்தியது.
சாலைகள் சீரமைப்பு
இதனையடுத்து மறு டெண்டர் விடப்பட்டு 2021-ம் ஆண்டு மீண்டும் பணிகள் தொடங்கியது. இதில் நீடாமங்கலம் கோவில் வெண்ணியில் இருந்து கொரடாச்சேரி வரை புறவழிசாலையாகவும், திருவாரூர் தண்டலை கலெக்டர் அலுவலகம் அருகில் இருந்து கிடாரங்கொண்டான் வரை புறவழிச்சாலையாகவும், இதனால் நாகை பகுதியில் பல்வேறு இடங்களில் புறவழிச்சாலையாக தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் பல நகர் பகுதி வழியாக செல்லும் விடுபட்ட தேசிய நெடுஞ்சாலைகளை சீரமைத்திட அரசு திட்டமிடப்பட்டது.
அதன்படி தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையை சீரமைப்பதற்கு ரூ.114 கோடியே 87 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கியது. இதில் நாகை பகுதியில் இருந்து பணிகள் தொடங்கிய நிலையில், தற்போது திருவாரூர் நகர் வாழவாய்க்கால் பகுதியில் சாலைகள் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.