தஞ்சை ரெயில் நிலையத்தை ரூ.23 கோடியில் மேம்படுத்தும் பணிகள் தொடக்கம்
மத்திய அரசின் அம்ரிபாரத் திட்டத்தில் தஞ்சை ரெயில் நிலையத்தை ரூ.23 கோடியில் மேம்படுத்தும் பணிகள் தொடங்கி உள்ளன.
மத்திய அரசின் அம்ரிபாரத் திட்டத்தில் தஞ்சை ரெயில் நிலையத்தை ரூ.23 கோடியில் மேம்படுத்தும் பணிகள் தொடங்கி உள்ளன.
அம்ரிபாரத் திட்டம்
திருச்சி ரெயில்வே கோட்டத்தில் திருச்சிக்கு அடுத்தபடியாக அதிக வருமானம் தரும் ரெயில் நிலையம் தஞ்சை ரெயில் நிலையம் ஆகும். தஞ்சை ரெயில் நிலையத்தில் 2022-2023-ம் ஆண்டில் மட்டும் ரூ.43.16 கோடி வருவாய் டிக்கெட் மூலம் கிடைத்துள்ளது. 36 லட்சம் பயணிகள் வந்து சென்றுள்ளனர்.
இந்த நிலையில் மத்திய அரசு நாடு முழுவதும் அம்ரிபாரத் திட்டத்தின் கீழ் 508 ரெயில் நிலையங்களை மேம்படுத்த உத்தரவிட்டு நிதி ஒதுக்கீடு செய்தது. இதற்கான பணிகளை பிரதமர் நரேந்திரமோடி கடந்த 6-ந்தேதி தொடங்கி வைத்தார்.
கூடுதல் நடைமேடைகள்
இந்த திட்டத்தின் கீழ் ரெயில் நிலையங்களில் நடை மேம்பாலம், கூடுதல் நடைமேடைகள், பயணிகள் காத்திருப்பு அறைகள், நுழைவுவாயில்கள் சீரமைப்பு, மின்தூக்கி, நகரும் படிக்கட்டுகள், மல்டி லெவல் பார்க்கிங் வசதி, கண்காணிப்பு கேமரா, வை பை வசதி உள்ளிட்ட நவீன வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது.
அதன்படி தஞ்சை ரெயில் நிலையத்தில் மட்டும் ரூ.23 கோடி செலவில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் தற்போது தொடங்கி உள்ளன. இதில் இயங்காமல் இருந்த நகரும் படிக்கட்டுகள் சீரமைக்கப்பட்டன.
மேற்கூரை அமைக்கும் பணி
தஞ்சை ரெயில் நிலையத்தில் 5 நடைமேடைகள் உள்ளன. இதில் 1 மற்றும் 2 நடைமேடைகள் மட்டும் அதிக பயன்பாட்டில் இருந்து வருகிறது. 5 நடைமேடைகளிலும் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் மேற்கூரைகள் உள்ளன. பல இடங்கள் திறந்த வெளியாக இருப்பதால் பயணிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் முதல் கட்டமாக நிழற்கூரை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இதற்காக நடைமேடைகளில் பொக்லின் எந்திரங்களை கொண்டு பள்ளம் தோண்டப்பட்டு, கான்கிரீட் கழிவுகள், மண் போன்றவை உடனடியாக லாரிகள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. இதே போல் பழைய கட்டிடங்களின் மீது இருந்த மேற்கூரைகளை அகற்றும் பணிகளிலும் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.