நின்ற லாரி மீது டேங்கர் லாரி மோதல்; டிரைவர் பலி


நின்ற லாரி மீது டேங்கர் லாரி மோதல்; டிரைவர் பலி
x

வள்ளியூரில் நின்ற லாரி மீது டேங்கர் லாரி மோதியதில் டிரைவர் பலியானார்.

திருநெல்வேலி

வள்ளியூர்:

தர்மபுரியில் தனியார் நிறுவனத்தில் இருந்து பால் ஏற்றிய டேங்கர் லாரி நேற்று முன்தினம் இரவில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டு சென்றது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த ஜீவா (வயது 38) லாரியை ஓட்டினார். மாற்று டிரைவராக தர்மபுரியைச் சேர்ந்த மது (55) இருந்தார்.

நேற்று அதிகாலையில் நெல்லை மாவட்டம் வள்ளியூர் நாற்கர சாலையில் சென்றபோது, ஜல்லிக்கற்கள் லோடு ஏற்றிய லாரி சாலையோரம் நின்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக, அந்த லாரியின் பின்புறமாக டேங்கர் லாரி மோதியது.

இதில் டேங்கர் லாரியில் இருந்த மாற்று டிரைவர் மது பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். டிரைவர் ஜீவா காயமடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், வள்ளியூர் போலீசார் விரைந்து சென்று, காயமடைந்த ஜீவாவை சிகிச்சைக்காக வள்ளியூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இறந்த மதுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்துக்குள்ளான டேங்கர் லாரியில் இருந்து பால் சாலையில் கொட்டியது. உடனே மாற்று டேங்கர் லாரியை வரவழைத்து, அதில் பாலை நிரப்பி அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story