சேத்தியாத்தோப்பு அருகே வடிகால் அமைத்து தரக்கோரி கிராம மக்கள் போராட்டம்
சேத்தியாத்தோப்பு அருகே வடிகால் அமைத்து தரக்கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேத்தியாத்தோப்பு,
தஞ்சாவூர்-விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் சேத்தியாத்தோப்பு அடுத்த வீரமுடையாநத்தம் ஊராட்சி பெரியக்குப்பம் மெயின் ரோட்டில் வெள்ளாறு வரை உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் இப்பாலம் கட்டும் பணியில் வடிகால் வாய்க்கால் அமைக்கப்படாததால், மழைக்ககாலங்களில் மழைநீர் ஊருக்குள் புகும் அபாயம் உள்ளது. இதனால் வடிகால் வாய்க்கால் அமைக்கக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று காலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் பாரி, சேத்தியாத்தோப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா, புவனகிரி தாசில்தார் சிவக்குமார், சிதம்பரம் சப்-கலெக்டர் சுவேதா சுமன், வருவாய் ஆய்வாளர் ஜான் பிரிட்டோ, பொதுப்பணித்துறை பொறியாளர் படை காத்தான் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையேற்ற கிராம மக்ளக் போராட்டத்தை கைவிட்டு கலைந்து கொண்டனர்.