சுடுகாடு அமைத்து தரக்கோரி சாலை மறியல்


சுடுகாடு அமைத்து தரக்கோரி சாலை மறியல்
x

கபிஸ்தலம் அருகே சுடுகாடு அமைத்து தரக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 60 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்

கபிஸ்தலம்:

கபிஸ்தலம் அருகே சுடுகாடு அமைத்து தரக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 60 பேரை போலீசார் கைது செய்தனர்.

சாலை மறியல்

ஆடுதுறை, விசித்திர ராஜபுரம், கலைஞர் நகர், ஆகிய 3 பகுதிகளுக்கும் உடனடியாக சுற்றுச்சுவருடன் கூடிய சுடுகாடு கட்டித்தர வேண்டும். இதற்கு சாலை வசதி செய்து தர வேண்டும். உள்ளிக்கடை மாரியம்மன் கோவில் தெரு மற்றும் மாதா கோவில் தெரு பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையான சாலை ஆக்கிரமிப்பை அகற்றி தார்ச்சாலை அமைத்து தர வலியுறுத்தியும் கபிஸ்தலம் அருகே உள்ள கணபதி அக்ரஹாரம் கடை தெருவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கண்ணையன் தலைமை தாங்கினார். பாபநாசம் ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, மாவட்ட குழு உறுப்பினர் பிரபு, ஒன்றியக்குழு உறுப்பினர் லெனின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாநில குழு உறுப்பினர் மாசிலாமணி, மாநில குழு தவச்செல்வன், பாபநாசம் நகர செயலாளர் கணேசன், மாவட்ட குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் விஜயாள், மாவட்ட குழு உறுப்பினர் இந்திரா காந்தி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

60 பேர் கைது

இதுகுறித்து தகவல் அறிந்த கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேஷி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட 60 பேரை கைது செய்து அந்த பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இந்த சாலை மறியலால் கும்பகோணம்-திருவையாறு சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story