50 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய தாரமங்கலம் ஏரி
50 ஆண்டுகளுக்கு பிறகு தாரமங்கலம் ஏரி நிரம்பியது. இதனால் குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் புகுந்தது.
தாரமங்கலம்:
தாரமங்கலம் ஏரி
காவிரி உபரி நீரை 100 ஏரிகளுக்கு நிரப்பும் திட்டத்தின் கீழ் திறந்து விடப்பட்ட தண்ணீர் திப்பம்பட்டி, சின்னேரி, மானத்தாள், தொளசம்பட்டி, பெரியேரிபட்டி, பெரியகாடம்பட்டி ஆகிய ஏரிகள் நிரம்பி தாரமங்கலம் ஏரிக்கு வந்தது.
இதைத்தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் தாரமங்கலம் ஏரி நிரம்பியது. 156 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஏரி நிரம்பிய பின்னர் உபரி நீரானது பவளத்தானூர், துட்டம்பட்டி ஆகிய ஏரிகள் வழியாக சென்று சரபங்கா நதியில் கலக்கிறது.
தண்ணீர் புகுந்தது
தாரமங்கலம் ஏரி நிரம்பி வழிவதால்,விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே தாரமங்கலம் ஏரியில் இருந்து பவளத்தானூர் ஏரிக்கு தண்ணீர் செல்லும் நீர் வழித்தடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால் ஏரி தண்ணீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. இதைத்தொடர்ந்து தாசில்தார் வல்லமுனியப்பன், வருவாய் ஆய்வாளர் முருகேசன், கிராம நிர்வாக அதிகாரி சுசீலா ஆகியோர் நீர்வழித்தடத்தை ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.