விவசாயிகளுக்கு 1½ லட்சம் மரக்கன்றுகள் இலவசமாக வழங்க இலக்கு: கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்


விவசாயிகளுக்கு 1½ லட்சம் மரக்கன்றுகள் இலவசமாக வழங்க இலக்கு: கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்
x
தினத்தந்தி 27 Sept 2023 12:15 AM IST (Updated: 27 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளுக்கு 1½ லட்சம் மரக்கன்றுகள் இலவசமாக வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டத்தில், தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு 1½ லட்சம் மரக்கன்றுகளை இலவசமாக வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

மரக்கன்று

தமிழகத்தின் வனப்பரப்பை 23.6 சதவீதத்தில் இருந்து 33 சதவீதமாக உயர்த்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி 2023-24-ம் ஆண்டு வேளாண் காடு வளர்ப்புத் திட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு 1 லட்சத்து 65 ஆயிரம் மரக்கன்றுகள் இலவசமாக வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கான மரக்கன்றுகள் பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

விவசாயிகள் தங்கள் வயல் வரப்புகளில் நடவு செய்திட அதிகபட்சமாக ஏக்கருக்கு 50 மரக்கன்றுகளும், விவசாய நிலங்களில் குறைந்த செறிவில் நடவு செய்திட அதிகபட்சமாக ஏக்கருக்கு 160 மரக்கன்றுகளும் வழங்கப்படும். இந்த மரக்கன்றுகள் வளர்ந்து அறுவடை செய்யும் போது வனத்துறையின் அனுமதியை விவசாயிகள் எளிதில் பெறும் வகையில் நடவு செய்த மரக்கன்றுகள் அனைத்தும் வருவாய்த்துறையின் அடங்கல் பதிவேட்டில் பதிவு செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த திட்டத்தில் சிறு, குறு விவசாயிகள், பெண் விவசாயிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இதில் தேக்கு, செம்மரம், கருங்காலி, வேங்கை, சந்தனம், மஞ்சள் கடம்பு, ஈட்டி, மலை வேம்பு, மகோகனி, மருது மற்றும் பூவரசு போன்ற மரக்கன்றுகளும், மருத்துவ குணம் உள்ள வேம்பு, புங்கன், புளி, மருது, தான்றிக்காய், பெருநெல்லி மற்றும் வில்வம் போன்ற மரக்கன்றுகளும் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

இலவசமாக...

இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் வேளாண்மை விரிவாக்க மையத்திலோ அல்லது உழவன் செயலி வாயிலாகவோ பதிவு செய்து தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநரின் பரிந்துரையின்படி அருகில் உள்ள வல்லநாடு வனத்துறை மத்திய நாற்றங்கால், கச்சனாவிளை வனத்துறை மத்திய நாற்றங்கால், ஊத்துப்பட்டி வனத்துறை மத்திய நாற்றங்கால், விளாத்திகுளம் வனத்துறை மத்திய நாற்றங்கால் மற்றும் சாலிகுளம் வனத்துறை மத்திய நாற்றங்காலில் விவசாயிகள் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story