ரூ.92½ லட்சம் கதர் விற்பனை செய்ய இலக்கு; கலெக்டர் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.92½ லட்சம் கதர் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கூறினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.92½ லட்சம் கதர் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கூறினார்.
மாலை அணிவிப்பு
தூத்துக்குடியில் மகாத்மா காந்தியடிகளின் 154-வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி கிழக்கு மண்டல அலுவலக வளாகத்தில் உள்ள காந்தியடிகள் உருவச்சிலைக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து வ.உ.சி. சாலையில் உள்ள காதி கிராப்ட் கடையில் கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-
இலக்கு
உத்தமர் காந்தியடிகளால் கிராமப்புற ஏழை- எளிய மக்களுக்கு ஆண்டு முழுவதும் வாழ்வளிக்க வேண்டும் என்ற சீரிய நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டதுதான் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம். தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி கதர் அங்காடி இயங்கி வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்துக்கு கடந்த ஆண்டு கதர் விற்பனை குறியீடாக ரூ.82 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டது. இதில் ரூ.50 லட்சத்து 14 ஆயிரம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கிராமப் பொருட்கள் ரூ.52 லட்சத்து 48 ஆயிரம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்துக்கு கதர் விற்பனை இலக்காக ரூ.92 லட்சத்து 50 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒத்துழைப்பு
இதனை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம், அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், நகராட்சிகள், பேரூராட்சிகள், அரசு மருத்துவமனை வளாகங்களில் தற்காலி ககதர் விற்பனை நிலையங்கள் வருகிற 2-ந் தேதி முதல் தீபாவளி வரை செயல்பட உள்ளது. காதியில் தரமான ஜவுளிகள், தேன், குளியல் சோப்பு, சாம்பிராணி, பூஜைப் பொருட்கள், பனைவெல்லம் மற்றும் பனைபொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கதர் மற்றும் பாலிவஸ்திரா ரகங்களுக்கு 30 சதவீதமும், உல்லன் ரகங்களுக்கு 20 சதவீதமும் சிறப்பு தள்ளுபடி அனுமதிக்கப்படுகிறது.
அரசு அலுவலர்கள் மாதத்தவணைகளில் கதர் ரகங்களை வாங்கி பயன்பெறலாம். எனவே அரசு ஊழியர்கள், பொதுமக்கள் அனைவரும் இந்த தொழிலில் ஈடுபட்டு இருக்கும் நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களின் வாழ்வாதாரம் சிறக்க கதர் துணிகளை வாங்கி ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் நவீன் பாண்டியன், தூத்துக்குடி தாசில்தார் செல்வக்குமார், காதி கிராப்ட அலுவலர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.