தனியார் வங்கி நகை மதிப்பீட்டாளர் வீட்டின் முன்பு பெண் தர்ணா மயங்கி விழுந்ததால் பரபரப்பு


தனியார் வங்கி நகை மதிப்பீட்டாளர் வீட்டின் முன்பு பெண் தர்ணா  மயங்கி விழுந்ததால் பரபரப்பு
x

ஜெயங்கொண்டம் அருகே தனியார் வங்கி நகை மதிப்பீட்டாளர் வீட்டின் முன்பு பெண் தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது அவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அரியலூர்

நகை மதிப்பீட்டாளர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் தனியார் வங்கி ஒன்றில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இவருடைய வீட்டின் முன்பு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்த 44 வயது பெண் ஒருவர் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அந்த வாலிபரின் குடும்பத்தாருக்கும் அந்த பெண்ணுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது:-

திருமண ஏற்பாடு

ஜெயங்கொண்டத்தில் தனியார் நகைக்கடை அதிபருடன் எனக்கு திருமணம் நடைபெற்றது. தற்போது தனியார் வங்கியில் பணிபுரியும் அந்த வாலிபர் எங்களது கடையில் பணிபுரிந்தார். அப்போது அவருக்கும், எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்த எனது கணவர் என்னை விவகாரத்து செய்து விட்டார். இதையடுத்து, எனது கணவர் கொடுத்த பணம் நகைகளை அவரிடம் கொடுத்தேன். பின்னர் இருவரும் கடந்த 13 ஆண்டுகளாக கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தோம்.

இந்தநிலையில் அவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்வதாக தகவல் அறிந்தேன். எனவே அந்த வாலிபர் என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும். மேலும் என்னிடம் வாங்கிய ரூ.35 லட்சம் மற்றும் 70 பவுன் நகைகளை வழங்க வேண்டும் என கோரி தர்ணாவில் ஈடுபட்டதாக கூறினார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

மயங்கி விழுந்தார்

இதையடுத்து, அந்த பெண்ணை சமாதானம் செய்த போலீசார் இந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதில், சமாதானம் அடைந்த அவர் தனது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றார். அப்போது அவர் திடீரென சாலையில் மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் வீட்டில் இருந்தவர்கள் ஓடி வந்து அவருக்கு முகத்தில் தண்ணீர் தெளித்து, குடிக்க தண்ணீர் கொடுத்து, தட்டி எழுப்பி ஆசுவாசப்படுத்திய பின்னர் அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story