தொடங்கிய வேகத்தில் முடங்கிய பணிகள்: தேனியாறு ராஜவாய்க்கால் முழுமையாக தூர்வாரப்படுமா? ஏமாற்றமும், எதிர்பார்ப்புமாய் காத்திருக்கும் மக்கள்
தேனியில் தேனியாறு ராஜவாய்க்கால் தூர்வாரும் பணிகள் தொடங்கிய வேகத்தில் முடங்கியது. பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தேனியாறு ராஜவாய்க்கால்
நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் என்று அரசும் அடிக்கடி அறிவுறுத்தி வருகிறது. ஆனாலும் கால் நூற்றாண்டை கடந்தும் தேனியில் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி தூர்ந்து போய் கிடக்கும் ராஜவாய்க்காலுக்கு நிரந்தர விடிவுகாலம் பிறக்கவில்லை.
தேனி கொட்டக்குடி ஆற்றின் தடுப்பணையில் இருந்து உருவாகும் ராஜவாய்க்கால், பள்ளிவாசல் தெரு, பழைய பஸ் நிலையம், பங்களாமேடு, அரண்மனைப்புதூர் விலக்கு, ராஜாக்களம் வழியாக கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள தாமரைக்குளம் கண்மாயில் முடிவடைகிறது. தேனி நகருக்குள் ஆறுபோல் ஓடிக் கொண்டிருந்த வாய்க்கால் என்பதால், இது தேனியாறு ராஜவாய்க்கால் என்று அழைக்கப்பட்டது.
இந்த வாய்க்கால் சுமார் 2½ கிலோமீட்டர் நீளம் கொண்டது. வாய்க்கால் மற்றும் வாய்க்காலின் இருபுறமும் நடைபாதை இருந்தது. இந்த வாய்க்காலை நம்பி நேரடி பாசனமாக 222.27 ஏக்கர் நிலங்கள் பயன்பெற்று வந்தது. தாமரைக்குளம் கண்மாய் மூலம் 111.54 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றன. காலப்போக்கில் இந்த வாய்க்கால் தூர்வாரப்படாமல் புதர்மண்டத் தொடங்கியது. கரைப்பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வாய்க்கால் பரப்பளவு குறுகியது.
கைவிட்ட பொதுப்பணித்துறை
நாளடைவில் வாய்க்கால் பல இடங்களில் தூர்ந்து போய்விட்டது. தற்போது பாம்புகள் தங்கும் இடமாகவும், குப்பைகள் கொட்டும் இடமாகவும், கழிவுநீர் கலக்கும் இடமாகவும் வாய்க்கால் மாறிவிட்டது. வாய்க்கால் தூர்ந்து போனதால், இதை நம்பி இருந்த விவசாய நிலங்கள் வீட்டடி மனைகளாக மாறி வருகின்றன.
இன்றைக்கு கட்டிடங்களாக உயர்ந்து நிற்கும் பழைய பஸ் நிலையத்தில் இருந்து ராஜாக்களம் வரையிலான பகுதிகள் ஒரு காலத்தில் செழிப்பான வயல்வெளிகளாக இருந்தன. இன்றைக்கு மிச்சம் இருக்கும் விவசாய நிலங்கள் தரிசாகவும், வீட்டடி மனைகளாகவும் மாறிக் கிடக்கிறது. நெல்லும், கரும்பும் விளைந்த வயல்களில் கட்டப்பட்ட பல வீடுகளை இன்றைக்கு மாடித்தோட்டங்களும், குரோட்டன்ஸ் செடிகளும் அலங்கரித்துக் கொண்டு இருக்கின்றன.
பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த வாய்க்கால் மூலம் நேரடி பாசனப் பரப்பளவு பெரும் அளவில் குறைந்து விட்டது. இதனால், பொதுப்பணித்துறையால் கைவிடப்பட்ட வாய்க்காலாக இது மாறி உள்ளது.
மழைக்கால பாதிப்பு
மழைக்காலங்களில் மதுரை சாலையில் மழைநீர் வடிந்து செல்ல வழியின்றி குளமாக தேங்குகிறது. எனவே மழைநீர் வடிகாலாகவும் பயன்படும் இந்த வாய்க்காலை தூர்வாராமல் இருப்பதால் ஒவ்வொரு மழையின் போதும் மக்கள் பல்வேறு பரிதவிப்புகளை சந்தித்து வருகின்றனர்.
கடந்த காலங்களில் இந்த வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று மக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கோரிக்கை வைப்பதும், தொடர் கோரிக்கை எதிரொலியாக தூர்வார திட்டமிட்டு பின்னர் பின்வாங்குவதுமாக இருப்பதால் ஒவ்வொரு முயற்சியின் போதும் மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. கடந்த 2018-ம் ஆண்டு மக்கள் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து வாய்க்காலை தூர்வாரும் பணியை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டது. ஆனால் சில நாட்களில் பணிகள் முடங்கியது. அப்போது பொதுப்பணித்துறையினரும் 166 ஆக்கிரமிப்பாளர்களை அடையாளம் கண்டு நோட்டீஸ் வழங்கினர். அதன்பிறகு மேல் நடவடிக்கை எதுவும் இல்லை.
முடங்கிய பணிகள்
மழைக்காலங்களில் பாதிப்பு அதிகரித்ததால் கடந்த மாதம் 6-ந்தேதி நகராட்சி நிர்வாகம் சார்பில் இந்த வாய்க்காலை தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது. அரண்மனைப்புதூர் விலக்கில் தொடங்கி சுமார் 300 மீட்டர் வரை வாய்க்கால் தூர்வாரப்பட்டது. இதனால் புதர்மண்டி கிடந்த வாய்க்கால், புதிய தோற்றம் பெற்றது. ஆனால், அதன்பிறகு நிதி பற்றாக்குறை மற்றும் ஆக்கிரமிப்பு பிரச்சினை காரணமாக கடந்த ஒரு வார காலமாக பணிகள் முடங்கி கிடக்கின்றன. இது மக்களுக்கு மீண்டும் ஏமாற்றம் கொடுக்கிறது.
மாவட்ட நிர்வாகம் இந்த பிரச்சினையில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்பது வியாபாரிகள், பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதுகுறித்து தேனி நகர ஓட்டல் உரிமையாளர்கள் சங்க செயலாளர் பொன் முருகனிடம் கேட்டபோது, "எனது வீடு ராஜவாய்க்கால் அருகில் தான் உள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வாய்க்காலில் குளித்து விட்டு தான் பள்ளிக்கூடம் செல்வோம். இந்த வாய்க்காலில் வரும் அயிரை மீனுக்கு தனி ருசி உண்டு. பூலோக சொர்க்கம் போல் உணர வைத்த இடம் இன்றைக்கு புதர்மண்டிக் கிடப்பதை பார்க்கவே வேதனையாக இருக்கிறது. மாவட்ட கலெக்டர் இந்த பிரச்சினையில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். அரசு நிதி கிடைக்க தாமதம் ஆனால், பொதுமக்கள் பங்களிப்போடு வாய்க்காலை தூர்வார முயற்சி மேற்கொள்ள வேண்டும்" என்றார்.
தேனியில் தேனியாறு ராஜவாய்க்கால் தூர்வாரும் பணிகள் தொடங்கிய வேகத்தில் முடங்கியது. பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பழனிசெட்டிபட்டியை சேர்ந்த பாம்புபிடிக்கும் நபரான கண்ணன் கூறுகையில், "இந்த வாய்க்கால் புதர்மண்டி கிடப்பதால் பாம்புகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. வாய்க்கால் கரையோர பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு அடிக்கடி பாம்புகள் வருகின்றன. இதனால் குழந்தைகளை வைத்துக் கொண்டு அச்சத்தோடு வாழ வேண்டிய நிலைமை உள்ளது. வாய்க்கால் கரையோர வீடுகள், கடைகளுக்குள் பாம்பு புகுந்து விட்டதாக அடிக்கடி எனக்கு தகவல் வருகிறது. கொடிய விஷம் கொண்ட கண்ணாடி விரியன், கட்டு விரியன் பாம்புகளை அதிக அளவில் பிடித்து வனப்பகுதியில் விட்டுள்ளேன்" என்றார்.
ராஜவாய்க்கால் கடந்து செல்லும் 32-வது வார்டு பகுதியின் கவுன்சிலரும், நகராட்சி துணைத்தலைவருமான செல்வம் கூறுகையில், "இந்த வாய்க்கால் முழுமையாக தூர்வாரப்பட்டால் தேனி நகரின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். 30 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு நிறைவு செய்வதற்கு மக்களின் ஒத்துழைப்பும் அவசியம். தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறோம்" என்றார்.
இந்த வாய்க்கால் பிரச்சினையில் மாவட்ட நிர்வாகம் தனிக்கவனம் செலுத்தி முடங்கிய பணிகளை மீண்டும் முடுக்கி விட்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாக உள்ளது.