புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்


புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்
x
திருப்பூர்


அணைப்பாளையத்தில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று அனைத்துக்கட்சியினர் கலெக்டரிடம் மனு கொடுத்து முறையிட்டனர்.

அனைத்துக்கட்சியினர் மனு

திருப்பூர் மாநகராட்சி 25-வது வார்டுக்கு உட்பட்ட அணைப்பாளையம் பகுதியை சேர்ந்த அனைத்துக்கட்சி நிர்வாகிகள் நேற்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். இதில் கவுன்சிலர் தங்கராஜ் (அ.தி.மு.க.), நந்தகோபால் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), கவுன்சிலர் செல்வராஜ் (இந்திய கம்யூனிஸ்டு), ஈஸ்வரன் (காங்கிரஸ்), தம்பி வெங்கடாசலம் (கொ.ம.தே.க.), சன்.முத்துக்குமார் (தந்தை பெரியார் திராவிடர் கழகம்), கவுரி சங்கர் (ம.தி.மு.க.) மற்றும் பொதுமக்கள் கலெக்டர் வினீத்திடம் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

அணைப்பாளையத்தில் ரெயில்வே நுழைவு பாலத்திற்கும், நொய்யல் ஆற்றின் மேம்பாலத்துக்கும் இடையே குறுகிய சாலையில் டாஸ்மாக் கடை (எண்.1965) திறக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது என்று அனைத்துக் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்த பின்னரும் கடை திறக்கப்பட்டுள்ளது.

அணைப்பாளையம், ரங்கநாதபுரம், சிறுபூலுவப்பட்டி, காவிலிபாளையம், கணியாம்பூண்டி பகுதிகளில் இருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் தினமும் இந்த சாலை வழியாக செல்கிறார்கள்.

டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்

காலையிலும், மாலையிலும் ரெயில்வே நுழைவுப்பாதையின் இருபுறமும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை தீர்க்க கட்டப்பட்டு வரும் மேம்பாலமும் முடிவடையாமல் உள்ளது. தற்போது புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையால் போக்குவரத்து நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது.

கடந்த 14-ந் தேதி அனைத்துக்கட்சியினர், பொதுமக்கள் பங்கேற்ற கூட்டத்தில் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை உடனடியாக அணைப்பாளையம் பகுதியில் இருந்து அகற்ற வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.


Next Story