டாஸ்மாக்கை முற்றுகையிட்டு நாம்தமிழர் கட்சியினர், மீனவபெண்கள் போராட்டம்


பாம்பனில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கதவை உடைத்து நாம் தமிழர் கட்சியினர் மற்றும் பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

ராமநாதபுரம்

பாம்பன்,

பாம்பனில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கதவை உடைத்து நாம் தமிழர் கட்சியினர் மற்றும் பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கூடுதல் விலை

பாம்பனில் ரெயில்வே நிலையம் அருகே ஒரே இடத்தில் 3 டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. புண்ணியத்தலமான ராமேசுவரம் பகுதியில் ஐகோர்ட்டு உத்தரவுப்படி எங்கும் மதுபான கடைகள் கிடையாது. ஆனால் ராமேசுவரத்தில் பல்வேறு இடங்களிலும் கள்ளத்தனமாக மது விற்பனை அதிகமாக நடைபெற்று வருகிறது என்று கூறப்படுகிறது.

பாம்பனில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இருந்து பலர் மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கி வந்து ராமேசுவரத்தில் பல்வேறு இடங்களிலும் வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். கள்ளத்தனமாக மது பாட்டில் விற்பனை செய்யும் தொழிலில் ராமேசுவரம் பகுதியில் மட்டும் 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக டோர் டெலிவரியாக மது பாட்டில்களை விற்பனை நடந்து வருகிறது.

தேர்தல் வாக்குறுதி

இந்த நிலையில் பாம்பன் பகுதியில் செயல்பட்டு வரும் 3 டாஸ்மாக் மதுபான கடைகளையும் நிரந்தரமாக மூட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழக அரசு உடனடியாக இதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் சொன்னதுபோல் தமிழகம் முழுவதும் அனைத்து மதுபான கடைகளையும் மூட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கட்சியின் மாவட்ட செயலாளர் கண்.இளங்கோ தலைமையில் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜு, நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் குமரன், மாவட்ட தலைவர் நாகூர் கனி, மகளிர் பாசறை நிர்வாகி இலக்கியா, பாம்பன் ஊராட்சி செயலாளர் தினேஷ் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகளும் மற்றும் பாம்பன் பகுதியைச் சேர்ந்த மீனவபெண்கள் பலர் பஸ் நிறுத்தத்தில் இருந்து டாஸ்மாக்கை மூட வலியுறுத்தி பேரணியாக ரெயில்வே நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு வந்தனர்.

முற்றுகை

டாஸ்மாக் கடையில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்கு முன்பாகவே போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியும் போலீசாரையும் மீறி நாம் தமிழர் கட்சியினர் மற்றும் பெண்களும் டாஸ்மாக் கடை முன்பு வேகமாக சென்று டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு கதவை உடைக்க முயன்றனர்.

போராட்டக்காரர்களை கண்டதும் கடையில் இருந்தவர்கள் கதவை வேகமாக மூடிவிட்டு உள்ளேயே இருந்தனர். தொடர்ந்து அங்கு வந்த ராமேசுவரம் போலீஸ் துணை சூப்பிரண்டு தனஞ்ஜெயன் தலைமையிலான போலீசார் போராட்டம் நடத்தியவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அதன் பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டு பாம்பனில் உள்ள திருமணம் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

மீண்டும் விற்பனை

பாம்பனில் உள்ள டாஸ்மாக் கடையின் கதவை உடைக்க முயன்று போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்தியது அங்கு கூடியிருந்த குடிமகன்கள் மற்றும் போலீசார்மத்தியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியது. முற்றுகைப் போராட்டத்தை தொடர்ந்து பாம்பனில் உள்ள டாஸ்மாக் கடைகள் நேற்று சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக மூடப்பட்டு இருந்தது. அதன் பின்னர் வழக்கம்போல் கடைகள் திறந்து மதுபான விற்பனை அமோகமாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story