டாஸ்மாக்கடை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
டாஸ்மாக்கடை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ராமநாதபுரம் அருகே உள்ள வாலாந்தரவை ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ்செல்வி தலைமையில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- எங்கள் ஊராட்சிக்கு உட்பட்ட அய்யங்கோவில் அருகே களம் செல்லும் தார்ச்சாலை பகுதியில் வயல்வெளியில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்க புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைக்கப்பட உள்ள இந்த மதுக்கடையால் அந்த பகுதியை சுற்றிலும் உள்ள மக்களுக்கு பெரும் பாதிப்பும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படும் ஆபத்து உள்ளது. இதனை கருத்தில் கொண்டு அளம் கிராம மக்கள், உடைச்சியார்வலசை, ஏந்தல், முனுசுவலசை, மொட்டையன்வலசை உள்ளிட்ட கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கு ஏற்ப ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மேற்கண்ட இடத்தில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். எனவே, மேற்கண்ட கிராம மக்களின் மனஉணர்வை கருத்தில் கொண்டு அந்த பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை அமைப்பதை தடுத்து உதவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.