மதுவில் விஷம் கலந்து குடித்து டாஸ்மாக் ஊழியர் தற்கொலை


மதுவில் விஷம் கலந்து குடித்து டாஸ்மாக் ஊழியர் தற்கொலை
x

மதுவில் விஷம் கலந்து குடித்து டாஸ்மாக் ஊழியர் தற்கொலை

திருவாரூர்

கோட்டூர் அருகே சொத்து தகராறில், மதுவில் விஷம் கலந்து குடித்து டாஸ்மாக் ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டாஸ்மாக் ஊழியர்

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே கீழப்பனையூர் திருவாசல்பட்டினம் தெருவை சேர்ந்தவர் குணசேகரன்(வயது 45). இவரது மனைவி பரமேஸ்வரி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும், 1 ஆண் குழந்தையும் உள்ளனர். பெருகவாழ்ந்தான் டாஸ்மாக் கடையில் குணசேகரன் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார்.

குணசேகரனுக்கும், அவரது அண்ணன் கண்ணதாசனுக்கும் நீண்ட நாட்களாக சொத்து பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குணசேகரன் வீட்டில் வளர்த்து வந்த வாழை மரத்தை கண்ணதாசன் வெட்டியுள்ளார். இந்த தகவல் 2 நாட்களுக்கு பிறகே குணசேகரனுக்கு தெரியவந்தது. இந்த தகவலை தன்னிடம் ஏன் சொல்லவில்லை என குணசேகரன் தனது மனைவியிடம் கேட்டு தகராறு செய்துள்ளார்.

மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை

இந்த சம்பவத்தால் மனமுடைந்து காணப்பட்ட குணசேகரன் பூச்சி மருந்தை (விஷம்) மதுவில் கலந்து குடித்து விட்டு மயங்கி விழுந்தார். இதை பார்த்த அவரது மனைவி கதறி அழுதார்.

அவரது சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடிவந்து குணசேகரனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று குணசேகரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

இது குறித்து கோட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார், சப்-இன்ஸ்பெக்டர் மேகநாதன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சொத்து தகராறில் மதுவில் விஷம் கலந்து குடித்து டாஸ்மாக் ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story