டாஸ்மாக் விற்பனையாளர் தீக்குளித்து தற்கொலை
மனைவியை பிரிந்து வாழ்ந்த சோகத்தில் டாஸ்மாக் விற்பனையாளர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஊட்டி,
மனைவியை பிரிந்து வாழ்ந்த சோகத்தில் டாஸ்மாக் விற்பனையாளர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
டாஸ்மாக் விற்பனையாளர்
நீலகிரி மாவட்டம் ஊட்டி அடுத்த பாலாகொலா பி.மணியட்டியை சேர்ந்தவர் ராஜ்கண்ணன் (வயது 44). இவர் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். இவருக்கும் அறையட்டி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் 14 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் ராஜ் கண்ணனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாகவும், தொடர்ந்து மது குடித்து விட்டு வந்ததால் வீட்டில் தினம்தோறும் தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் தினந்தோறும் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் திருமணம் முடிந்த 2 ஆண்டுகளில் அவருடைய மனைவி அவரை பிரிந்து சென்று விட்டார்.
தீக்குளித்து தற்கொலை
கடந்த சில நாட்களாக மனைவி பிரிந்த சோகத்தில் பலரிடம் அவர் புலம்பி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது ராஜ்கண்ணன் உடலில் மண் எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து ஊட்டி ஊரக போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கண்மணி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
.