கூடலூரில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் கொள்ளை-மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
கூடலூரில் அரசு மதுக்கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சத்து 91 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடலூர்
கூடலூரில் அரசு மதுக்கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சத்து 91 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூட்டு உடைப்பு
கூடலூர் காளம்புழா பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான எரிவாயு தகன மேடை உள்ளது. இதன் அருகில் 2 மதுக்கடைகள் (டாஸ்மாக்) உள்ளது. கடந்த 4 -ம் தேதி இரவு டாஸ்மாக் ஊழியர்கள் வழக்கம் போல் மதுக்கடைகளை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றனர். மறுநாள் வள்ளலார் நினைவு தினம் என்பதால் மதுக்கடைகள் திறக்கப்பட வில்லை. பின்னர் நேற்று பகல் 12 மணிக்கு கடையை திறக்க வந்தனர். அப்போது நடுவில் உள்ள மதுக்கடையின் பக்கவாட்டு நுழைவு வாயிற்கதவை திறக்க முயன்றனர். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு கீழே கிடப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து உள்ளே சென்று மற்றொரு கதவை பார்த்தனர். அதிலிருந்த பூட்டுடன் கூடிய கொண்டி உடைந்து தொங்கி கொண்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த டாஸ்மாக் ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தனர்.
ரூ.2 லட்சம் கொள்ளை
அப்போது கடையில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 91 ஆயிரம் பணம் கொள்ளை போனது தெரிய வந்தது. இது தவிர மதுபாட்டில்களும் திருட்டு போனது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கூடலூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள், சப்- இன்ஸ்பெக்டர்கள் பூ ராஜன், வெள்ள தங்கம் உள்ளிட்ட போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மேலும் மதுக்கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விரல் ரேகை பதிவு செய்யப்பட்டது. இது குறித்து கூடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறும்போது, 5-ம் தேதி மதுக்கடை விடுமுறை என்பதால் முன்கூட்டியே மது விற்பனை அதிகமாக இருந்துள்ளது. இதனால் பணத்தை கடைக்குள் வைத்து விட்டு ஊழியர்கள் சென்றுள்ளனர். இதை பயன்படுத்தி பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.