டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்


டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்
x
தினத்தந்தி 15 April 2023 12:15 AM IST (Updated: 15 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாச்சிகட்டளை-தலைச்சங்காடு சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என செம்பனார்கோவில் ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மயிலாடுதுறை

பொறையாறு:

நாச்சிகட்டளை-தலைச்சங்காடு சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என செம்பனார்கோவில் ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஒன்றியக்குழு கூட்டம்

செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணை தலைவர் மைனர் பாஸ்கரன், ஒன்றிய ஆணையர் மீனா, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) விஜயலட்சுமி, மாவட்ட குழு உறுப்பினர் ராபியாநர்கீஸ்பானு அப்துல் மாலிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய மேலாளர் கோவிந்தராஜ் வரவேற்றார். கூட்டத்தில் உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதாவது:-

மோகன்தாஸ்:-கிடாரங்கொண்டான்-தலையுடையவர்கோவில்பத்து, பொன்செய்-முடிகண்டநல்லூர் ஆகிய பகுதியில் இணைப்பு பாலம் அமைக்க வேண்டும். நாச்சிகட்டளை-தலைச்சங்காடு செல்லும் சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்.

சேதமடைந்த அங்கன்வாடி கட்டிடம்

சுப்பிரமணியன்:- கஞ்சாநகரம் அருகே மங்கனூர் கிராமத்தில் சேதமடைந்த அங்கன்வாடி கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்டித்தர வேண்டும். மங்கனூர் தெற்கு தெரு சாலையை சீரமைத்து தர வேண்டும்

ராஜ் கண்ணன்:- ஆக்கூரில் பிடாரி குளம் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும். புங்கையன் தோப்பு பகுதியில் தார்ச்சாலை அமைக்க வேண்டும்.

சக்கரபாணி:- கருவாழக்கரை மாரியம்மன் கோவில் பகுதியில் வடிகால் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும். மருதூர் அரசு பள்ளி நடுநிலைப்பள்ளி செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும்.

மின்விளக்கு

ரஜினி:- 1-வது வார்டு பகுதிக்கு உட்பட்ட குளங்களை தூர்வார வேண்டும்.தேவிகா:- இலுப்பூர் ஊராட்சி எரவாஞ்சேரி மாரியம்மன் கோவில் சாலையில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும். சேதமடைந்த எரவாஞ்சேரி பாலத்தை புதிதாக கட்ட வேண்டும்.

லெனின் தாஸ்:- காழியப்பநல்லூர் ஊராட்சியில் நீர்த்தேக்க தொட்டி, ஆழ்துளைகிணறு ஆகியவற்றை தனிநபர் ஆக்கிரமித்துள்ளது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். டி.மணல்மேடு ஊராட்சியில் காடுவெட்டி, நடுவலூர், நட்சத்திரமாலை ஆகிய கிராமங்களுக்கு சுடுகாடு செல்ல சாலை அமைத்து தர வேண்டும்.

அடிப்படை வசதிகள்

ஜெயந்தி:- தில்லையாடி-திருவிடைக்கழி இடையே பூச்சாத்தனூர் பகுதியில் உள்ள சேதமடைந்த பாலத்தை புதிதாக கட்டித் தர வேண்டும்.

செல்வம்: கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் எனது வார்டுக்கு வரும் போது எனக்கு தகவல் கொடுப்பது இல்லை.

நந்தினி ஸ்ரீதர்(ஒன்றியக்குழு தலைவர்):- உறுப்பினர்களின் கோரிக்கைகள் தொடர்பாக உரிய பரிசீலனை செய்து குடிநீர், தெரு விளக்கு மற்றும் சாலைகள் இல்லாத இடங்களில் அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்கள், அலுவலர்கள் சுகாதாரம் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story