டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்
நாகை புதிய பஸ் நிலையம் அருேக உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை புதிய பஸ் நிலையம் அருேக உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆன்மிக சுற்றுலா தளம்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புகழ்பெற்ற மாதா பேராலயம், நாகூர் ஆண்டவர் தர்கா, சிக்கல் சிங்காரவேலர் கோவில் ஆகியவை அமைந்த, மும்மதத்தினரும் வழிபட்டு செல்லக்கூடிய ஆன்மிக சுற்றுலா தளமாக உள்ளது. இதனால் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் பல்வேறு பகுதியில் இருந்து நாகை மாவட்டத்திற்கு வந்து செல்கின்றனர்.
இதன் காரணமாக நாகை புதிய பஸ் நிலையம் எப்போதும் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருப்பதால் பரபரப்பாக காணப்படும். நாகை பஸ் நிலையத்துக்குள் நுழைந்து வெளியே செல்ல 2 வழிகள் உள்ளன. இந்த 2 வழிகளுக்கு இடைப்பட்ட வேதாரண்யம் பஸ்கள் நிற்கும் பகுதிக்கு அருகே ஒரு நுழைவாயில் உள்ளது.
வழிபாதையில் அமர்ந்து குடிக்கின்றனர்
நாகை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி மார்க்கமாக செல்லும் பொதுமக்கள் இந்த வழியாக சென்று வருகின்றனர். நாகை புதிய பஸ் நிலையம் அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் இருந்து மதுபாட்டில்களை மதுபிரியர்கள் வாங்கி வந்து இந்த வழியில் பாதையில் அமர்ந்து மது குடிக்கின்றனர்.
அவ்வாறு குடிப்பது மட்டுமில்லாமல் மதுபாட்டில்களை அங்கேயே போட்டுவிட்டு செல்கின்றனர். வழியை அடைத்து கொண்டு, அந்த பகுதியில் நின்று மது குடிப்பதால் அந்த வழியாக நடந்து செல்லவே பொது மக்களை முகம் சுளிக்க வைக்கிறது. இரவு நேரங்களில் அந்த பகுதியில் அமர்ந்து மது குடிப்பதால், குறிப்பாக பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் அந்த பகுதியை கடந்து பஸ் நிலையத்துக்குள் செல்ல அச்சப்படுகின்றனர்.
டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்
தமிழ்நாடு சட்டசபையில் பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அருகே உள்ள டாஸ்மாக்கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதில் நாகை மாவட்டத்தில் 5 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் நாகை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையும் மூடப்படும் என எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றத்தை அளித்ததாக கூறும் நாகை பொதுமக்கள் பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மார்க் கடையை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாணவிகள் அச்சம்
கல்லார் மெய்தீன் கூறுகையில், நாகை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை வாங்கிவிட்டு அருகிலேயே குடிக்கின்றனர். பொது இடம் கூட என்றும் பாராமல் ஒரு நாளைக்கு 10, 20 பேர் கூட்டமாக அந்த இடத்தில் நின்று கொண்டும், அமா்ந்து கொண்டு மது குடிக்கின்றனர். மதுவை குடித்துவிட்டு அந்த இடத்திலேயே வாந்தி எடுக்கின்றனர். அதேபோல் நிர்வாணமாக படுத்து கிடக்கும் போதை ஆசாமிகளால் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் அந்த வழியாகவே செல்லவே அச்சப்படுகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க அருகில் உள்ள கடைக்காரர்கள் வியாபாரம் செய்ய முடியவில்லை. மது குடித்துவிட்டு கடைவாசலில் வாந்தி எடுப்பதும். மதுபாட்டில்களை கடை முன்பு உடைத்து செல்வதுமாக மது பிரியர்கள் அட்டகாசம் செய்வதால் வியாபாரம் செய்ய முடியாத நிலையில் தவிர்த்து வருகின்றனர். எனவே நாகை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டும். இல்லையென்றால் இடமாற்றம் செய்ய வேண்டும் என்றார்.
வேதனை
அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக மாநில குழு உறுப்பினர் பிலோமினா கூறுகையில், தமிழக அரசு உத்தரவு படி நாகை மாவட்டத்தில் 5 மதுபாட்டில்கள் மூடப்பட்டன. இந்த பட்டியலில் நாகை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையும் அகற்றப்படும் என எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் இந்த டாஸ்மாக் கடை அகற்றுவதற்கான எவ்வித அறிவிப்பும் இல்லாதது வேதனை அளிப்பதாக உள்ளது.
பொது இடத்தில் இந்த டாஸ்மாக் கடை உள்ளதால் அங்கு நின்று மது குடிப்பவர்களை கண்டு முகம் சுளித்தவாரே கடந்து செல்ல வேண்டி உள்ளது. சிலர் மதுபோதையில் சண்டையிடுவது பயணிகளை அச்சுறுத்துவதாக உள்ளது.
எனவே பெண்களின் பாதுகாப்பையும், பயணிகளின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு பொதுமக்கள் கூடும் இடமான நாகை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை தமிழக அரசு அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.