பள்ளிக்கூடம், வழிபாட்டு தலங்கள் அருகில் செயல்படும் டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும்-கலெக்டரிடம் பொதுமக்கள் மனு


பள்ளிக்கூடம், வழிபாட்டு தலங்கள் அருகில் செயல்படும் டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும்-கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 30 May 2023 12:30 AM IST (Updated: 30 May 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிக்கூடம், வழிபாட்டு தலங்கள் அருகில் செயல்படும் டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

தூத்துக்குடி

பள்ளிக்கூடம், வழிபாட்டு தலங்கள் அருகில் செயல்படும் டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு மனுக்கள் கொடுத்தனர்.

பா.ஜனதா பிரமுகர் காசிலிங்கம் தலைமையில் தூத்துக்குடி டூவிபுரம் பகுதியை சேர்ந்த மக்கள் கொடுத்த மனுவில், தூத்துக்குடி டூவிபுரம் 5-வது தெருவில் வி.வி.டி. பிரதான சாலையில் பள்ளிக்கு அருகே டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதி மக்களும், பள்ளிக் குழந்தைகளும் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இந்த டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதேபோல் நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் அந்தோணி லிட்டில்ராஜ் கொடுத்த மனுவில், தூத்துக்குடி அருகே மாப்பிள்ளையூரணி ஊராட்சி தாளமுத்துநகர் பிரதான சாலையில் 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளால் அப்பகுதியில் அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றன. இந்த கடைகளுக்கு அருகே பள்ளிகள், வழிபாட்டு தலங்கள் உள்ளன. எனவே, இந்த 2 டாஸ்மாக் கடைகளையும் அகற்றிவிட்டு வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்து மக்கள் கட்சியினர் மாவட்ட செயலாளர் வீரமுருகன் தலைமையில் மனு கொடுத்தனர். அதில், தி.மு.க. அரசு தனது தேர்தல் வாக்குறுதிபடி பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். அதுவரை டாஸ்மாக் கடைகளை கள்ளு கடைகளாக மாற்றி பனை மற்றும் தென்னை விவசாயிகளுக்கு கள் இறக்க அனுமதி அளித்து அரசே கொள்முதல் செய்து விற்பனை செய்திட வேண்டும் என்று கூறிஇருந்தனர்.

ஆய்வு செய்ய வேண்டும்

தூத்துக்குடி ஆரோக்கியபுரம் அய்யர்விளை பகுதியை சேர்ந்த லிங்கசிவா என்ற பெண் தனது 2 மகன்கள் மற்றும் குடும்பத்தினருடன், சமத்துவ மக்கள் கழக மாவட்ட தலைவர் அற்புதராஜ் தலைமையில் கலெக்டரிடம் அளித்த மனுவில், எனது கணவர் ஜெயகணேசன் கடந்த 25-ந் தேதி தூத்துக்குடி காய்கறி சந்தை அருகே கீரை வியாபாரம் செய்த போது அந்த பகுதியில் உள்ள அண்ணா சிலையை சுற்றி அமைக்கப்பட்டுள்ள இரும்பு கம்பியை தொட்ட போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்த சிலை மாவட்ட தி.மு.க. சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதற்கான மின் இணைப்பு மாநகராட்சி ஆணையர் பெயரில் உள்ளது. மின் இணைப்பை நகர்ப்புற மின்சார வாரியம் வழங்கியுள்ளது. சிலையை சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள அலங்கார மின் விளக்குகளுக்கான மின்சார இணைப்பை சரியான மற்றும் பாதுகாப்பான முறையில் கொடுக்கப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

திருச்செந்தூர் அருகே உள்ள மானாடு தண்டுபத்து சுதந்திரநகரை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். எங்கள் கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளியின் கிழக்கு பக்க சுவர் மற்றும் அதனை ஒட்டிய பகுதி தனக்கு சொந்தமானது என தனிநபர் உரிமை கொண்டாடி வருகிறார். இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் தலையிட்டு முறையாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

பஸ்கள் நின்று செல்ல...

பொட்டலூரணி அருணாச்சலநகர் கிராம மக்கள் அளித்த மனுவில், எங்கள் கிராமத்தின் விரிவாக்க பகுதியாக அருணாச்சலநகர் விளங்கி வருகிறது. இந்த பகுதியானது ஏற்கெனவே இருக்கும் பஸ் நிறுத்தத்திற்கு ½ கிலோமீட்டருக்கு முன்பாக உள்ளது. பொட்டலூரணி வழியாக செக்காரக்குடி செல்லும் பஸ்கள் அனைத்தும் அருணாச்சலநகரில் நின்று செல்லும் வகையில் பஸ் நிறுத்தம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிஇருந்தனர்.


Next Story