டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்-கலெக்டரிடம், பா.ஜனதாவினர் மனு
டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று கலெக்டரிடம் பா.ஜனதாவினர் மனு கொடுத்தனர்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜனதா கட்சியின் தலைவர் சித்ராங்கதன், கலெக்டர் செந்தில்ராஜிடம் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு அனுமதியுடன் மதுபானம் சில்லரையாக விற்பனை செய்யும் டாஸ்மாக் கடைகள் மொத்தம் 142 கடைகள் உள்ளது. அதில் 74 கடைகளுக்கு மட்டும் தான் பார் உரிமை வழங்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ள கடைகள் பார் இல்லாத கடைகள் என டாஸ்மாக் நிறுவன மேலாளர், தகவல் அறியும் உரிமை சட்ட கடிதத்தில் தெரிவித்து உள்ளார்.
ஆனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் பார்கள் செயல்படுகிறது. எனவே அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து அனுமதி இல்லாத பார்களை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அனுமதி இல்லாத பார்கள் நடத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதி பெற்ற பார்களுக்கு வெளியே அனுமதி கடிதத்தை பெரியதாக அனைவரும் பார்க்கும்படி காட்சிப்படுத்த வேண்டும்.
மேலும் டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலைக்கு மேல் அதிக விலைக்கு விற்பனை செய்யும் கடை மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து கடைகளிலும் மாவட்ட நிர்வாகம் மூலம் விலை பட்டியல் வைக்க வேண்டும். அதுபோல் இரவு 10 மணிக்கு மேல் சட்டவிரோதமாக நடைபெறும் மதுபான விற்பனையை உடனடியாக தடுக்க வேண்டும். பள்ளி மற்றும் வழிபாட்டு தலங்கள் அருகே இயங்கும் டாஸ்மாக் கடைகளை சட்டத்தின்படி உடனே மூட வேண்டும் அவ்வாறு இல்லை என்றால் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா. ஜனதா கட்சி சார்பாக தூத்துக்குடி சிப்காட்டில் உள்ள டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தின் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறப்பட்டு உள்ளது.