விவசாயத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்


விவசாயத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்
x

விவசாயத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என குறை தீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

திருப்பத்தூர்

குறைதீர்வு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், விவசாயிகள் கலந்துகொண்டு குறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து பேசினர்.

அவர்கள் பேசியதாவது:-

விவசாய கூட்டத்துக்கு வெகு தொலைவில் இருந்து வரும் விவசாயிகளுக்கு பயணப்படி, அனைத்து விவசாயிகளுக்கும் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். மாதந்தோறும் வட்ட அளவிலும், கோட்ட அளவிலும் விவசாயிகள் குறை தீர்வுக்கூட்டம் நடத்த வேண்டும். கோமாரி நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வண்டல் மண், களிமண் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ள நீர்நிலைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

கால்நடை மருத்துவமனை

வாணியம்பாடி, ஆம்பூர் பாலாறு பகுதிகளில் மணல் திருட்டை தடுக்க வேண்டும். வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் உள்ள பாலாற்றில் தோல் கழிவுகள் கலக்கப்படுவதால் மீன்கள் உயிரிழக்கின்றன. திருப்பத்தூர் மாவட்டத்தில் விதை ஆய்வு மையம் அமைக்க வேண்டும். கந்திலி பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட வேளாண்மை விரிவாக்க மையத்தை உடனடியாக திறக்க வேண்டும்.

வாணியம்பாடியை சுற்றியுள்ள கிராம ஊராட்சிகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைக்கழிவுகள் பாலாற்றில் கொட்டப்பட்டு வருவதால் பாலாறு மாசடைந்துள்ளது. ஆம்பூர் பகுதியில் உழவர் சந்தை, கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும்.

டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்

ஏரிக்கோடி பகுதியில் வரிசையாக 5 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு மது வாங்கும் மதுபிரியர்கள் அருகேயுள்ள விவசாய நிலங்களில் அமர்ந்து மது அருந்திவிட்டு காலி பாட்டில்களை விவசாய நிலங்களில் வீசிவிட்டு செல்கின்றனர். இறைச்சி கழிவுகள், உணவு கழிவுகளையும் நிலங்களில் கொட்டிவிட்டு செல்வதால் அடுத்த நாள் விவசாய வேலைக்காக வரும் விவசாயிகள் அங்குள்ள பாட்டில்களையும், உணவு கழிவுகளை வெளியேற்றும் அவல நிலை ஏற்படுகிறது. அதேபோல, திருமால்பூர் நகரில் சாராய விற்பனை அதிகமாக நடக்கிறது. இதனை காவல்துறை கண்டுகொள்வதில்லை.

எனவே, ஏரிக்கோடி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். சாராய விற்பனையை முழுமையாக ஒழிக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் பேசினர்.

இக்கூட்டத்தில், வேளாண்மை இணை இயக்குனர் பாலா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன், துணை பதிவாளர் பாலசுப்பிரமணியன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் விஜயகுமாரி, தோட்டக்கலை உதவி இயக்குனர் பாத்திமா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story