டாஸ்மாக் போக்குவரத்து வாகன ஒப்பந்ததாரர்கள்வேலைநிறுத்த போராட்டம்
திண்டுக்கல்லில், டாஸ்மாக் போக்குவரத்து வாகன ஒப்பந்ததாரர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தினமும் 10 ஆயிரம் மதுபான பெட்டிகள்
தமிழகத்தில் உள்ள அரசு மதுபான கடைகளுக்கு தேவையான மதுபானங்கள், அந்தந்த மாவட்டங்களில் செயல்படும் டாஸ்மாக் குடோன்களில் இருந்து சரக்கு வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.
அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படுகிற டாஸ்மாக் கடைகளுக்கான மதுபான பாட்டில்கள், முள்ளிப்பாடியில் உள்ள குடோனில் இருந்து வாகனங்கள் மூலம் தினமும் 10 ஆயிரம் மதுபான பெட்டிகள் அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்காக பயன்படுத்தும் லாரிகள், மினிலாரிகள் உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் ஒப்பந்ததாரர்கள் மூலம் இயக்கப்படுகிறது.
தற்காலிகமாக ஒத்தி வைப்பு
இந்த நிலையில் சரக்கு வாகனங்களுக்கான ஒப்பந்ததாரர்களை நியமிப்பதற்கான டென்டர் சென்னையில் நேற்று நடந்தது. இதில் முறைகேடு நடப்பதாக கூறி தமிழகம் முழுவதும் ஒப்பந்ததாரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்படி திண்டுக்கல் மாவட்ட அரசு போக்குவரத்து வாகன ஒப்பந்ததாரர்களும் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு டாஸ்மாக் குடோனில் வைக்கப்பட்டிருந்த மதுபான பெட்டிகள் வெளியே கொண்டு செல்லப்படாமல் தேக்கமடைந்தன.
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் செயல்படும் டாஸ்மாக் கடைகளில் நேற்று மாலை 5 மணி வரை மதுபானம் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதற்கிடையே சென்னை டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.
இதையடுத்து மாலை 5 மணிக்கு மேல் முள்ளிப்பாடி டாஸ்மாக் குடோனில் இருந்து மதுபான பெட்டிகளை ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனங்கள் புறப்பட்டு சென்றன.