வரி வசூலை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள்
வரி வசூலை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள்
போடிப்பட்டி
தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சிப் பகுதிகளில் வரி வசூலை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சர்வர் கோளாறால் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.
டிஜிட்டல் மயம்
ஊராட்சிகளில் வரி வசூலை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.ஆனால் குறுகிய கால அவகாசத்தில் வரி செலுத்துவோர் குறித்த முழுமையான தகவல்களை ஆன்லைனில் பதிவேற்ற வேண்டிய நிலை உள்ளதால் உள்ளாட்சிப் பணியாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.அதேநேரத்தில் சர்வர் கோளாறால் பணிகள் தடைபடுவதுடன் மன உளைச்சலுக்கும் ஆளாகி வருகின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்கள் கூறியதாவது:-
கடந்த சில நாட்களாக சர்வர் பிரச்சினையால் பணிகள் மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. எனவே இரவு நேரங்களில் பணி செய்யுமாறு கூறுகிறார்கள். கூடுதலாக தற்காலிக பணியாளர்களை நியமித்துக் கொள்ளவும் அறிவுறுத்துகிறார்கள். ஆனால் அந்த பணியாளர்களுக்கு ஒரு பதிவுக்கு ரூ. 4 மட்டுமே வழங்கப்படுகிறது.அதிக தகவல்கள் பதிவு செய்ய வேண்டிய நிலையில் இந்த தொகை போதுமானதாக இல்லை. மேலும் போன் நம்பர், வீட்டின் பரப்பளவு உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் கேட்கப்படுகிறது. ஆனால் பலரும் போன் நம்பர்கள் வழங்க தயக்கம் காட்டுகிறார்கள்.
பதிவேற்றம்
மேலும் உள்ளாட்சி பிரதிநிதிகள் 'எங்கள் அனுமதியில்லாமல் எப்படி நீங்கள் வீடு வீடாக போய் தகவல் சேகரிக்கிறீர்கள்' என்று கோபம் கொள்கிறார்கள்.அத்துடன் நீண்ட காலமாக வீட்டு வரி செலுத்தியவர்களுக்கு தங்கள் வீடு என்ன அளவில் கட்டப்பட்டுள்ளது என்பது குறித்த விபரம் தெரிவதில்லை.ஆனால் அந்த விபரம் பூர்த்தி செய்யாமல் பதிவேற்றம் செய்ய முடியாத நிலை உள்ளது.இத்தனை சிரமங்களைத் தாண்டி அனைத்து தகவல்களையும் சேகரித்து பதிவேற்றம் செய்ய முயற்சிக்கும் போது சர்வர் கோளாறால் தாமதம் ஏற்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் அவசரம் அவசரமாக பதிவேற்றம் செய்யும்போது ஏதேனும் தவறு நடைபெற்றால் பின்னாளில் வீடு விற்பனை உள்ளிட்ட வேளைகளில் பயனாளிகள் தவிக்கும் நிலை ஏற்படக்கூடும்.ஒருசில ஊராட்சிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள நிலையில் 10 நாட்களில் முழுமையாக பணிகளை முடிப்பது என்பது சாத்தியமில்லாத விஷயமாகவே உள்ளது.எனவே சர்வர் பழுதை உடனடியாக சரி செய்யவும் பணிகளை மேற்கொள்ள கூடுதல் அவகாசம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
---