நெல்லை மாநகராட்சி சிறப்பு முகாம்களில் ரூ.31 லட்சம் வரி வசூல்
நெல்லை மாநகராட்சி சிறப்பு முகாம்களில் ரூ.31 லட்சம் வரி வசூல் செய்யப்பட்டது.
நெல்லை மாநகராட்சி சார்பில் 4 மண்டலங்களிலும் வார்டு வாரியாக சிறப்பு வரி வசூல் முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமை மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் நடைபெற்ற முகாமில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
இந்த முகாம்களில் புதிய சொத்துவரி விதிப்பு, பெயர் மாற்றம், புதிய குடிநீர் இணைப்பு, இரட்டை வரி விதிப்பு நீக்கம், காலிமனை வரி விதிப்பு ரத்து உள்ளிட்ட 82 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்க ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டார். இந்த முகாம்களில் மொத்தம் ரூ.31 லட்சத்து 11 ஆயிரத்து 819 வரி வசூலானது. இதில் உதவி ஆணையாளர்கள் வெங்கட்ராமன், காளிமுத்து, கிறிஸ்டி மற்றும் மாநகராட்சி வருவாய், நிர்வாக அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.