புதிதாக கட்டியுள்ள வீடு, கடைகளுக்கு வரி நிர்ணயம் செய்ய வேண்டும்


புதிதாக கட்டியுள்ள வீடு, கடைகளுக்கு வரி நிர்ணயம் செய்ய வேண்டும்
x

வாணியம்பாடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்கு வரி நிர்ணயம் செய்யாததால் குடிநீர் இணைப்பு பெற முடியவில்லை என்றும் உடனடியாக வரி நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

திருப்பத்தூர்

நகர மன்ற கூட்டம்

வாணியம்பாடி நகர மன்ற கூட்டம் தலைவர் உமா சிவாஜிகணேசன் தலைமையில் நடந்தது. ஆணையாளர் சதீஷ்குமார், துணைத் தலைவர் கயாஸ் அஹமத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொறியாளர் (பொறுப்பு) சங்கர் வரவேற்றார்.

கூட்டத்தில், நகர மன்ற தலைவருக்கு ரூ.15 ஆயிரம், துணைத் தலைவருக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் மன்ற உறுப்பினர்களுக்கு ரூ.5 ஆயிரம் மதிப்பூதியம் வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தல் உள்ளிட்ட 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற விவாதங்கள் வருமாறு:-

நாய்கள் தொல்லை

உறுப்பினர் பரிதாபானு:- 31-வது வார்டு பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. மாணவர்களை பயத்துடன் பள்ளிக்கு அனுப்ப வேண்டிய நிலை உள்ளது. கால்வாய் கட்ட ஒப்பந்தம் விட்டு இதுவரையில் எந்த பணியும் தொடங்கப்படவில்லை.

நசீமுன் நிசா:- 18-வது வார்டு பகுதியில் உள்ள கால்வாய்கள் தூர்வாரப்படாததால் கழிவு நீர் தேங்குகிறது. குப்பை அள்ள தூய்மை பணியாளர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். கூடுதல் ஆட்கள் அனுப்ப வேண்டும்.

நியாமத்துல்லா:- வார்டு பகுதியில் உள்ள சாலைகள் மிகவும் பழுதாகி உள்ளது. அதை சீரமைக்க வேண்டும்.

எம்.பஷீர் அஹமத்:- எனது வார்டு பகுதியில் குப்பைகள் சரிவர அள்ளுவதில்லை. குப்பை அள்ளுவதற்காக கூடுதல் ஆட்களை அனுப்ப வேண்டும்.

ஆய்வு செய்ய வேண்டும்

நுசுரத்தின்நிசா:- எனது வார்டு பகுதியில் உள்ள கால்வாய்கள் சேதம் அடைந்துள்ளதை சரி செய்ய வேண்டும். நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.

நாசீர்கான்:- நகர மன்ற தலைவர் மற்றும் ஆணையாளர் நாள் ஒன்றுக்கு ஐந்து வார்டுகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டால் பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு கிடைக்கும்.

கலீம்பாஷா:- மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு கால்வாய்களை சீர் செய்ய வேண்டும். மாதம் ஒருமுறை வார்டு பகுதியில் நகராட்சி ஆணையாளர் ஆய்வு செய்ய வேண்டும்.

பி.முஹம்மத் அனீஸ்:- கூஜா காம்பவுண்டு பகுதியில் 3 சிறு பாலங்களுக்கு டெண்டர் விட்டு ஒரு வருடம் ஆகியும் கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை. புதிதாக கட்டியுள்ள வீடு மற்றும் கடைகளுக்கு வரி நிர்ணயம் செய்யாததால் குடிநீர் இணைப்பு பெற முடியவில்லை. கடை மற்றும் வீடுகளுக்கு மின் இணைப்பு பெற தடையில்லா சான்றிதழ் வழங்காததால் மின் இணைப்பு பெறமுடியவில்லை. இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சையத் ஹபீப்:- எனது வார்டு பகுதியில் 3 சிறு பாலங்கள் கட்டும் பணிகள் நிலுவையில் உள்ளது. விரைந்து முடிக்க வேண்டும்.

இவ்வாறு உறுப்பினர்கள் பேசினர்.

நடவடிக்கை எடுக்கப்படும்

பின்னர் நகர மன்ற தலைவர் உமா சிவாஜிகணேசன் பேசுகையில் உறுப்பினர்களின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நாய் தொல்லைகளை முடிவுக்கு கொண்டு வர தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் அந்த தொல்லைகள் நீங்கும்.

மேலும் எந்தெந்த பகுதிக்கு சாலை வசதிகள் தேவையோ அவற்றை எழுதி கொடுத்தால் உடனடியாக சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

நகரமன்ற உறுப்பினர்கள் வி.எஸ்.சாரதி குமார், சித்ரா, மா.பா.சாரதி, ரஜினி, ஹாஜியார் ஜாகீர் அகமது, தவுலத், மெஹபூபுன்னிசா, முஹம்மத் நோமான், பிரகாஷ், ஆஷாபிரியா, பத்மாவதி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மேலாளர் பாஸ்கர் நன்றி கூறினார்.


Next Story