குன்னூர் சிம்ஸ் பூங்காவில் தேநீர் கண்காட்சி


குன்னூர் சிம்ஸ் பூங்காவில் தேநீர் கண்காட்சி
x
தினத்தந்தி 30 April 2023 12:15 AM IST (Updated: 30 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோடை விழாவையொட்டி குன்னூர் சிம்ஸ் பூங்காவில் தேநீர் கண்காட்சி வருகிற 22-ந் தேதி நடைபெறுகிறது என்று தேயிலை வாரிய செயல் இயக்குனர் தெரிவித்தார்.

நீலகிரி

ஊட்டி,

கோடை விழாவையொட்டி குன்னூர் சிம்ஸ் பூங்காவில் தேநீர் கண்காட்சி வருகிற 22-ந் தேதி நடைபெறுகிறது என்று தேயிலை வாரிய செயல் இயக்குனர் தெரிவித்தார்.

தேயிலை சுற்றுலா திருவிழா

நீலகிரி மாவட்டம் குன்னூர் இண்ட்கோசர்வ் அலுவலக கூட்டரங்கில் கோடை விழாவை முன்னிட்டு தேயிலை சுற்றுலா திருவிழா நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார். இதில் தேயிலை வாரிய செயல் இயக்குனர் முத்துக்குமார் தலைமை தாங்கி பேசியதாவது:-

நீலகிரி மாவட்டம் சுற்றுலா தலமாக உள்ளதால், ஆண்டுதோறும் உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்த ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தேநீர் குறித்து பல்வேறு நிகழ்வுகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சர்வதேச தேயிலை தினத்தின் ஒரு பகுதியாக அடுத்த (மே) மாதம் 21-ந் தேதி தேயிலை விற்பனையாளர் மற்றும் நுகர்வோர் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

தேநீர் காய்ச்சும் போட்டி

தேயிலைத்தூள் கலப்படத்தை தடுக்கவும், சுற்றுலா பயணிகளுக்கு தேநீர் குடிப்பதன் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேநீர் காய்ச்சும் போட்டி நடத்தப்படுகிறது. ஊட்டி தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா தேயிலை பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா மற்றும் பிற இடங்களில் நீலகிரி மாவட்ட சிறுதேயிலை விவசாயிகள் தயாரிக்கும் சிறப்பு தேயிலைத்தூள் வகைகளை காட்சிப்படுத்த அரங்குகள் அமைக்கப்பட உள்ளது.

மேலும், சுற்றுலா பயணிகள் கண்டு களிக்கும் வகையில் வருகிற 22-ந் தேதி குன்னூர் சிம்ஸ் பூங்காவில் தேநீர் கண்காட்சி நடைபெறுகிறது. சுற்றுலா பயணிகள் இடையே தேயிலை உற்பத்தி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேயிலை தொழிற்சாலைகளை நேரில் பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

முழு ஒத்துழைப்பு

எனவே, தேயிலை சுற்றுலா திருவிழாவை சிறப்பாக நடத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குநர் மோனிக்கா ரானா, ஆர்.டி.ஓ. துரைசாமி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ஷிபிலா மேரி, மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாசங்கர், தேயிலை வாரிய உதவி இயக்குனர் செல்வம், குன்னூர் தேயிலை வாரிய வளர்ச்சி அலுவலர் உமா மகேஸ்வரி, குன்னூர் தாசில்தார் சிவக்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story