நீலகிரியில் தேயிலை கண்காட்சி தொடக்கம்
தென்னிந்தியாவில் முதல் முறையாக நீலகிரியில் தேயிலை கண்காட்சி தொடங்கியுள்ளது. இதில் 30 அரங்குகளில் பல வகை ‘டீ’ காட்சிபடுத்தப் பட்டன.
குன்னூர்
தென்னிந்தியாவில் முதல் முறையாக நீலகிரியில் தேயிலை கண்காட்சி தொடங்கியுள்ளது. இதில் 30 அரங்குகளில் பல வகை 'டீ' காட்சிபடுத்தப் பட்டன.
கோடை விழா
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுேதாறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுவது வழக்கம். அப்போது சுற்றுலா பயணிகளின் வருகை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். அவர்களை மகிழ்விக்க கோடை விழா நடத்தப்படுகிறது.
அதன்படி இந்த ஆண்டு கோடை விழாவையொட்டி கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி, கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி நடந்தது. மேலும் ஊட்டியில் மலர் கண்காட்சி தொடங்கியுள்ளது.
தேயிலை கண்காட்சி
இதன் ஒரு பகுதியாக தென்னிந்தியாவில் முதல் முறையாக உலக தேயிலை தினத்தை முன்னிட்டு நேற்று மாவட்ட நிர்வாகம், தேயிலை வாரியம், சுற்றுலாத்துறை சார்பில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் தேயிலை கண்காட்சி தொடங்கியது.
இந்த கண்காட்சியை முன்னிட்டு டைகர்ஹில் டேன்டீ பகுதி தேயிலை தோட்டத்தின் மத்தியில் 1,200 தேயிலை தொழிலாளர்கள் இணைந்து மனித சங்கிலியை நடத்தினர்.
இதை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து குன்னூர் சிம்ஸ் பூங்காவில் தேயிலை கண்காட்சியையும் தொடங்கி வைத்தனர்.
பருகி பார்க்க ஏற்பாடு
கண்காட்சியில் 30 அரங்குகளில் நீலகிரியின் சில்வர் டீ, கிரீன் டீ, ஆர்த்தோடக்ஸ் டீ, ஒயிட் டீ உள்ளிட்ட பல்வேறு வகையான தேயிலைத்தூள் இடம் பெற்றுள்ளது. இது மட்டுமின்றி தேநீரை சுற்றுலா பயணிகள் பருகி பார்க்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இது தவிர கலப்பட தேயிலைத்தூளை கண்டறிய விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது. இந்த கண்காட்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். தொடக்க நிகழ்ச்சியில், தேயிலை வாரிய தென் மண்டல செயல் இயக்குனர் முத்துகுமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.