தேயிலை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


தேயிலை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x

கோத்தகிரி அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேயிலை விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேயிலை விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறைந்தபட்ச விலை

பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையை நிர்ணயிக்க வலியுறுத்தி அனைத்து கிராமங்களிலும் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்த நாக்குபெட்டா விவசாயிகள் சங்கம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஏற்கனவே ஜக்கலோடை, நாரகிரி, மிளிதேன் கிராமங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்தநிலையில் நேற்று 4-வது கிராமமான கோத்தகிரி கடைகம்பட்டி கிராமத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு சங்க பொதுச்செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். ஊர் தலைவர் கண்ணப்பன் அனைவரையும் வரவேற்றார். ஊர் நிர்வாகிகள் ரமேஷ், போஜராஜன், செவனாகவுடர், மாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பச்சை தேயிலை கிலோவுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.30 நிர்ணயம் செய்ய வேண்டும். படுகர் இன மக்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க வேண்டும்.

மானிய தொகை

விளைநிலங்களை அழித்து சொகுசு விடுதிகள், பங்களாக்கள் கட்டுவதை தடுக்க வேண்டும். நீலகிரியில் தேயிலை தொழிலை நம்பியுள்ள 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு தேயிலை விவசாயிகளை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் தேயிலை விவசாயிகளுக்கு மானிய தொகை வழங்க வேண்டும். தேயிலை வாரியம் மூலம் வழங்கப்படும் கல்வி உதவித்தொகையை அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும். அரசு தேயிலை ஏல மையத்தில் தேயிலைத்தூள் கிலோவுக்கு ரூ.150-க்கு மேல் ஏலம் எடுக்க வேண்டும் என வியாபாரியிடம் வலியுறுத்த வேண்டும்.

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள், ஆவின் பால் பூத்துகளில் தேயிலைத்தூள்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். முடிவில் சாலி நன்றி கூறினார். இதில் விவசாயிகள் கலந்துகொண்டனர்.


Next Story