கோத்தகிரி பகுதியில் கடும் பனிப்பொழிவால் கருகிய தேயிலை செடிகள்-விவசாயிகள் கவலை


கோத்தகிரி பகுதியில் கடும் பனிப்பொழிவால் கருகிய தேயிலை செடிகள்-விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 13 Feb 2023 12:15 AM IST (Updated: 13 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி பகுதியில் கடும் பனி பொழிவால் தேயிலை செடிகள் கருகின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி பகுதியில் கடும் பனி பொழிவால் தேயிலை செடிகள் கருகின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கடும் பனிப்பொழிவு

கோத்தகிரி மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை மற்றும் காய்கறி விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இந்த நிலையில் கோத்தகிரி பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர்ந்து மழை பெய்தது. மேலும் பனிமூட்டம் மற்றும் போதிய சூரிய வெளிச்சம் இல்லாததால், தேயிலை செடிகளில் கொப்புள நோய் தாக்கியது. ஆனாலும் தேயிலை விளைச்சல் போதுமானதாக இருந்தது வந்தது.

இந்த நிலையில் கடந்த மாதம் முழுவதும் நீர் பனிப்பொழிவு மற்றும் உறைப்பனி தாக்கம் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் தேயிலை செடிகள் அனைத்தும் கருகின.

விவசாயிகள் கவலை

இதற்கிடையில், பனியின் தாக்கத்தில் இருந்து தேயிலை செடிகளைப் பாதுகாக்க, தண்ணீர் வசதி உள்ள பகுதிகளில் விவசாயிகள் ஸ்பிரிங்ளர் மூலம் தண்ணீர் பாய்ச்சி வந்தனர். மேலும் சிலர் செடி, கொடிகள் மற்றும் தோகைகளை தேயிலை செடிகள் மீது பரப்பி வைத்து தேயிலை செடிகள் கருகாமல் பாதுகாத்து வந்தனர்.

ஆனாலும் கடும் பனிப்பொழிவு காரணமாக மிளிதேன், கேர்கம்பை, கீழ்கோத்தகிரி, ஒன்னட்டி, பனிப்பள்ளம், குடுமனை, பனஹட்டி உள்ளிட்ட பகுதிகளில் பல ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டுள்ள தேயிலை செடிகள் கருகி உள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துளள்னர். மேலும் மழை பெய்தால் மட்டுமே மீண்டும் தேயிலை செடிகள் பசுமைக்கு திரும்பும் என்பதால் விவசாயிகள் மழைக்காக காத்திருக்கின்றனர்.

4 மாதம் வரை ஆகும்

இதுகுறித்து தேயிலை விவசாயிகள் கூறுகையில், இந்த ஆண்டு பனிக்காலம் தாமதமாக தொடங்கியது. பகலில் வெயில் அடித்தாலும் இரவில் உறைபனியின் தாக்கம் இருந்ததால், தேயிலை கொழுந்துகள், செடிகள் கருகின. இதனால் சாகுபடி குறைந்துள்ளதுடன், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இனி மழை பெய்து பசுமை திரும்பி செடிகளில் கொழுந்து விட்டால் மட்டுமே பச்சை தேயிலையை பறிக்க முடியும். இதற்கு 4 மாதங்கள் வரை ஆகும். எனவே மழைக்காக எதிர்பார்த்துள்ளோம் என்று தெரிவித்தனர்.



Next Story