தேயிலைத்தூள் கிலோ ரூ.150-க்கு கொள்முதல் செய்ய வேண்டும்
நீலகிரியில் தேயிலைத்தூள் கிலோ ரூ.150-க்கு கொள்முதல் செய்ய வேண்டும் என்று தேயிலை வாரிய செயல் இயக்குனரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
குன்னூர்,
நீலகிரியில் தேயிலைத்தூள் கிலோ ரூ.150-க்கு கொள்முதல் செய்ய வேண்டும் என்று தேயிலை வாரிய செயல் இயக்குனரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
விவசாயிகள் போராட்டம்
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. சிறு, குறு விவசாயிகள் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேயிலை சாகுபடி செய்து வருகின்றனர். விவசாயிகள் தங்களது தோட்டத்தில் பறிக்கும் பச்சை தேயிலையை தொழிற்சாலைகளுக்கு வழங்கி வருகின்றனர். தற்போது தேயிலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை மட்டும் விலை கிடைத்து வருகிறது.
விலை வீழ்ச்சி காரணமாக உரம், மருந்து, கூலி, பராமரிப்பு செலவை ஈடுசெய்ய முடியாமல் விவசாயிகள் திண்டாடி வருகின்றனர். பச்சை தேயிலை வரத்து அதிகரித்ததால், தொழிற்சாலைகளில் தேயிலை கோட்டா முறையில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும் தேயிலை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.30 நிர்ணயம் செய்ய வேண்டும், தொழிற்சாலைகளில் பச்சை தேயிலையை கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேயிலைத்தூள் கொள்முதல்
இந்தநிலையில் நேற்று நீலகிரி மாவட்ட தேயிலை சிறு விவசாயிகள் நலச்சங்க தலைவர் போஜன் மற்றும் நிர்வாகிகள் குன்னூரில் புதிதாக பொறுப்பேற்ற தேயிலை வாரிய தென்மண்டல செயல் இயக்குனர் எம்.முத்துகுமாரை சந்தித்து தேயிலை பிரச்சினை குறித்து மனு அளித்தனர். இதுகுறித்து சங்க தலைவர் போஜன் நிருபர்களிடம் கூறியதாவது:- வாரந்தோறும் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் தேயிலை ஏலம் நடைபெறுகிறது. இதில் விற்பனை செய்யப்படும் தேயிலைத்தூளை வர்த்தகர்கள் கிலோ ரூ.150-க்கு வாங்க வேண்டும். விற்பனையாளர்களும் அதே விலைக்கு கொடுக்க வேண்டும்.
அப்போது தான் விவசாயிகள் வினியோகிக்கும் பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.30 கிடைக்க வாய்ப்பு உள்ளது. விலை அதிகம் கொடுத்து வாங்கும் போது தரமான தேயிலைத்தூளைதான் வாங்குவார்கள். இதன் மூலம் கலப்பட தேயிலைத்தூள் நின்றுவிடும். இதனால் தேயிலைத்தூளுக்கு கிராக்கி ஏற்படும். இதுகுறித்து செயல் இயக்குனர் தேயிலை பிரச்சினைக்கு ஒரு வாரத்தில் தீர்வு காண முயற்சி எடுக்கப்படும் என்றார். இதை ஏற்று வருகிற 5-ந் தேதி வரை போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உள்ளோம். சங்க கூட்ட முடிவின்படி அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.