தேயிலை கிலோவுக்கு ரூ.30 விலை வழங்க வேண்டும்


தேயிலை கிலோவுக்கு ரூ.30 விலை வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 17 Oct 2022 12:15 AM IST (Updated: 17 Oct 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

தேயிலை கிலோவுக்கு ரூ.30 விலை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

நீலகிரி

ஊட்டி,

நீலகிரி மாவட்ட சிறு விவசாயிகள் நல சங்க தலைவர் ஐ.போஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு தேயிலை விவசாயிகள் உள்ளனர். தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. மாவட்டத்தின் முழு பொருளாதாரமும் தேயிலை, தேயிலைத்தூள் உற்பத்தியை நம்பியே உள்ளது. தொடக்கத்தில் லாபகரமாக இருந்த இந்த தொழில், கடந்த 15 ஆண்டுகளாக சரிவை சந்தித்து வருகிறது. 1998-1999-ம் ஆண்டுகளில் பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.15 விலை இருந்தது. கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்டு உள்ள பணவீக்கம், விலைவாசி உயர்வு, கூலி மற்றும் உரம், மருந்து போன்ற இடுபொருள்களின் விலை உயர்வு ஆகியவற்றை கணக்கிடும்போது விவசாயிகளுக்கு தற்போது கிடைக்கும் விலை கட்டுப்படியாக இல்லை.

மத்திய தேயிலை வாரியமும், தமிழக அரசும் பச்சை தேயிலைக்கு உரிய விலை கிடைக்க சிறப்பு குழு உடனே அமைப்பதோடு, குறைந்தபட்சம் தேயிலை கிலோவுக்கு ரூ.30 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் மூலம் அதிகம் விலை கிடைக்கக்கூடிய வகையில் சீர்திருத்தத்தை மாநில அரசு உடனே கொண்டுவர வேண்டும். இதுகுறித்த மனு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தேயிலை வாரியத்திடம் அளிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story