21 பேருக்கு விருப்ப பணியிடமாறுதல்
அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கான விருப்ப பணியிட மாறுதல் கலந்தாய்வு திருப்பூரில் நடைபெற்றது. 21 ஆசிரியர்கள் பணியிடமாறுதல் பெற்றனர். 6 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்ததால் பாதிக்கப்பட்டனர்.
கலந்தாய்வு
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் பள்ளிகளில் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இசை, உடற்கல்வி, ஓவியம், தையல், கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு இந்த சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு மாதத்துக்கு 12 அரைநாள் வேலைநேரம் வழங்கப்பட்டது. மாத சம்பளமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது.
பகுதி நேர சிறப்பாசிரியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர். தி.மு.க. அரசும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தது. இந்தநிலையில் முதல்கட்டமாக மாவட்டத்துக்குள்ளும், மாவட்டம் விட்டு மாவட்டம் மாற, பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கான விருப்ப பணியிட மாறுதல் கலந்தாய்வு நேற்று திருப்பூர் நொய்யல் வீதி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.
6 மணி நேரம் காத்திருந்தனர்
மாவட்டத்துக்குள் மாற விருப்பம் உள்ள ஆசிரியர்களுக்கு நேற்று காலை கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. காலை 10 மணிக்கு கலந்தாய்வு வர அறிவிப்பு செய்யப்பட்டது. 75 ஆசிரியர்கள் கலந்தாய்வில் பங்கேற்க காத்திருந்தனர். ஆனால் கலந்தாய்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மாலை 4.45 மணிக்கு பிறகே கலந்தாய்வு தொடங்கியது. சீனியாரிட்டி அடிப்படையில் பட்டியல் தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக தெரிவித்தனர். 6 மணி நேரத்துக்கும் மேலாக பள்ளி வளாகத்தில் சிறப்பாசிரியர்கள் காத்திருந்ததால் மிகுந்த சிரமத்தை சந்தித்தார்கள்.
பின்னர் பள்ளிக்கல்வித்துறையின் அனைவருக்கும் கல்வி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன், கலந்தாய்வை நடத்தினார். இதில் 21 ஆசிரியர்களுக்கு மாவட்டத்துக்குள் விருப்ப பணியிடமாறுதல் வழங்கப்பட்டது. இன்று (வியாழக்கிழமை) மாவட்டம் விட்டு மாறும் சிறப்பாசிரியர்களுக்கு கவுன்சிலிங் நடக்கிறது.