ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி
ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் 2023-24-ம் கல்வியாண்டிற்கான முதல் பருவ, எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான கருத்தாளர்களுக்கு கடந்த 3 நாட்களாக தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் பயிற்சி வகுப்பு தனியார் பள்ளியில் நடந்தது. இதில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் சங்கர்,மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி திருவளர்செல்வி ஆகியோர் பயிற்சியை ெதாடங்கி வைத்தனர். மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் பயிற்சியின் அவசியம் குறித்து விளக்கிக்கூறினார். முதன்மை கல்வி அதிகாாி பயிற்சியின் நோக்கம் மற்றும் முக்கியத்துவம் பற்றி விளக்கினார். உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை பயிற்சியை பார்வையிட்டு முதன்மை கருத்தாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் உள்ள அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் 90 கருத்தாளர்கள் ஒவ்வொரு பாடத்திற்கும் என மொத்தம் 270 ஆசிரியர்கள் பங்கேற்றனர். கடைசி நாளில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அமுதா பயிற்சியை பார்வையிட்டு, செயல்பாடுகள் மூலம் கற்கும் பாடத்தின் முக்கியத்துவம் பற்றி விளக்கினார். புரிந்து கற்றலுக்கான வாய்ப்பு, பார்வைத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான ஒலிப்படங்கள், படைப்பாற்றலுக்கான வாய்ப்பு, மலர்நிலைக்கு என்பக்கம் பேச, எழுத இது என் நேரம், காணொலி, ஒலிப்பதிவுகள் ஆகியவை எண்ணும் எழுத்தும் திட்டத்தின் 2023-24-ம் கல்வியாண்டிற்கான சிறப்புக்கூறுகளாக திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து இப்பயிற்சி வருகிற 24, 25 மற்றும் 26-ந்தேதிகளில் ஒன்றிய அளவில் நடைபெற உள்ளது.